நம்பிக்கைகள் மனிதர்களை அசாத்தியமான பல காரியங்களை நிகழ்த்த வைத்திருக்கின்றன. நம்பிக்கைகளுக்காகத் தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் மனிதர்கள் இருக்கின்றார்கள். தாம் பின்பற்றுகின்ற சமய நம்பிக்கைக்காக தனது உயிரையும், தங்கள் வாழ்நாளையும் அர்ப்பணிக்கின்ற ஆழமான உறுதியான எண்ணத்துடன் வாழ்கின்ற மனிதர்களும் இருக்கின்றார்கள். அத்தகைய மனிதர்களைப் பற்றி உலக வரலாறு பல தகவல்களைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் ஐரோப்பிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்ற குழுவினராகக் கருதப்படுபவர்கள் தி நைட் டெம்ப்ளர்ஸ் (The Knight Templars ).
புகழ்பெற்ற கதாசிரியர் டான் பிரவுன் அவர்களது டாவின்சி கோட் நாவல் வெளிவந்த பிறகு இந்த நைட் டெம்ப்ளர் என்று அழைக்கப்படுகின்ற குழுவினரைப் பற்றிய பேச்சுக்களும் கலந்துரையாடல்களும் பரவலாக எழுந்தன. டான் பிரவுன் அவர்களது அடுத்தடுத்த நாவல்கள் ஒவ்வொன்றும் இவர்கள் பற்றியும் இவர்கள் வரலாற்றில் பெற்ற முக்கியத்துவம் பற்றியும், அதன் பின்னர் அவர்களது வீழ்ச்சி, அவ்வீழ்ச்சிக்கு பின்னர் எவ்வாறு இன்றும் இவர்களது ஆளுமை மறைமுகமாக உலகின் வல்லரசு நாடுகளில் தொடர்கின்றது என்ற வகையிலும் அமைந்தன.
ஒரு வரலாற்றுச் செய்தியைப் புராணக் கதைகள் மழுங்கடிக்கச் செய்ய முடியும். அதே நிலை தான் நைட் டெம்ப்ளர் என அழைக்கப்படுகின்ற இந்த போர் வீரர்களுக்கும் நடந்தது எனலாம். அந்தப் புராணக் கதைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு வரலாறு இவர்களைப் பற்றி என்ன சொல்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு நெடு நாளாக இருந்தது.
அண்மையில் எனது இங்கிலாந்துக்கான பயணத்தின் போது இப்போர் வீரர்களின் மையங்களாக இங்கிலாந்தில் இருக்கின்ற இரண்டு பகுதிகளுக்கு நேரில் சென்று வந்தேன். அதில் ஒன்று இங்கிலாந்தின் தென்கிழக்கு நகரமான டோவர் நகரில் அமைந்திருக்கின்ற நைட் டெம்ப்ளர்ஸ்களது சிதைந்த ஒரு ஆலயத்தின் தரைத்தளப் பகுதி. இது என்று பாதுகாக்கப்படுகின்ற ஒரு வரலாற்றுச் சின்னமாக அமைந்திருக்கின்றது என்பதோடு இதற்கு அருகாமையில் உள்ள சில பகுதிகள் பொதுமக்கள் செல்ல முடியாத, தனியாருக்குச் சொந்தமான இடங்களாக அமைந்திருக்கின்றன. இவர்களைப் பற்றி பேச தொடங்கினாலே ரகசியங்களும் மர்மங்களும் இவர்கள் வரலாற்றோடு இணைந்து வருகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
அதற்கு அடுத்ததாக, இன்று நைட் டெம்ப்ளர் என்று சொல்லப்படுகின்ற இந்தப் போர் வீரர்களுக்கு மையமாக அமைந்திருக்கின்ற லண்டன் மாநகரில் இருக்கின்ற டெம்பிள் சர்ச் என்ற ஒரு தேவாலயம். இந்த தேவாலயம் ஒரு ரகசிய அமைப்பு போல இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றாலும் பொதுமக்கள் இதன் உள்ளே வந்து இங்குள்ள அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பார்த்து செல்லக்கூடிய வகையில் இத்தேவாலயம் அமைந்திருக்கின்றது என்பது சிறப்பு. இன்று ஐரோப்பாவின் ஸ்பெயின், அயர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து, போர்த்துகள்இத்தாலி, கிரேக்கம், சைப்ரஸ், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பல நாடுகள், எகிப்து, ஜெருசலம் என பல பகுதிகளில் விரிவடைந்து இருந்தாலும் கூட, இவர்களின் மையமாகத் திகழ்வது இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருக்கின்ற இந்த டெம்பிள் சர்ச் தேவாலயம் தான்.
இந்த நைட் டெம்ப்ளர் போர் வீரர்களுக்கு தலைவராக இருப்பவர் கிராண்ட் மாஸ்டர் என அழைக்கப்படுகின்றார். தற்பொழுது கிராண்ட் மாஸ்டராக பொறுப்பில் இருக்கும் Robin Griffith-Jones எழுதிய The Knights Templar என்ற நூலை அதே தேவாலயத்தில் வாங்கினேன். இந்த நூல் கூறுகின்ற செய்திகளை இனி காண்போம்.
இந்த நூலின் அத்தியாயம் நைட் டெம்ப்ளர் எனப்படுபவர்கள் யார்? என்ற விளக்கத்தோடு தொடங்குகின்றது. சிலுவைப்போர்கள், சகோதரத்துவ செயல்பாடுகள், புனிதப் பயணிகள், லண்டனில் அமைக்கப்பட்ட புதிய கோயில், டெம்ப்ளர்களும் புனித கோப்பையும், அவர்களது வீழ்ச்சி, தற்போதைய நிலை என்ற வகையில் நூலின் ஏனைய பக்கங்கள் அமைந்துள்ளன.
இடைக்கால ஐரோப்பாவின் மிகப் புகழ்பெற்ற ராணுவ அமைப்பு தான் இது. ஐரோப்பாவின் கிறிஸ்துவ மன்னர்களும் மாவீரர்களும் புனித நகரமான ஜெருசலேமில் ஏசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட இடத்தை கிறிஸ்தவர்களுக்காக மீட்டெடுக்கவும், 'கடவுளின் திருச்சபையை விடுவிக்கவும்' போப்பாண்டவர் அர்பன் IIவிடுத்த அழைப்பிலிருந்து டெம்ப்லர்கள் உருவானார்கள்.
சிலுவைப்போர் ஐரோப்பிய வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு வரலாற்று நிகழ்வு. டெம்ப்லர்களின் வரலாறு முதல் சிலுவைப் போரில் தொடங்கியது, 1096 முதல் 1291 வரை நைட் டெம்ப்ளர் ராணுவம் மிகப்பெரிய அளவிலான சிலுவைப் போர்களையும் சிறிய அளவிலான போர்களையும் நிகழ்த்தின. புனித குன்றான சாலமன் கோயில் இருக்கும் இடத்தை இஸ்லாமிய அரேபியர்களிடம் இருந்து மீட்டெடுத்து கிறிஸ்தவ ஆதிக்கத்தை நிலை நாட்டுவது இதன் அடிப்படை நோக்கமாக இருந்தது. அதற்காக நிகழ்த்தப்பட்ட ஏறக்குறைய 200 ஆண்டுகள் காலவாக்கிலான போரில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். இப்பகுதியே ரத்த வெள்ளத்தில் மூழ்கியது என்பது வரலாற்றில் அழிக்க முடியாத சான்று. அது இன்றும் தொடர்கின்றது மற்றொரு வடிவில் என்பது நிகழ்கால அரசியல்!
இன்றைய ஜெருசலேம் நிலப்பகுதியில் அமைந்திருக்கின்ற சாலமன் கோயிலுக்குப் புனித பயணம் செல்வது கிறிஸ்தவ மத நம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது. ஆகவே அயர்லாந்து இங்கிலாந்து தொடங்கி ஐரோப்பாவின் பல பகுதிகளில் வாழ்கின்ற கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் பாதயாத்திரையாக இப்புனித தலத்தை நோக்கி வருவது முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது.
பாதுகாப்பற்ற, மிகவும் கடினமான பயணத்தைக் கொண்டதான இப்புனித பயணத்தை நிகழ்த்த விரும்புவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் ராணுவமாகவும் உணவு, தங்கும் வசதி ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும் அதற்கு தேவைப்படும் பொருளாதார தேவைகளை வங்கி போல நிர்வகித்து புனித யாத்திரை செல்பவர்களுக்கு உதவுவது இவர்களின் மைய நோக்கமாக இருந்தது.
தொடக்கத்தில் மிக எளிய வறுமை நிறைந்த புனித யாத்திரை செய்வோருக்கான பாதுகாவலர்களாக அறியப்பட்ட இவர்கள் படிப்படியாக பலம் பொருந்திய, ஏராளமான சொத்துகளுக்கு உரிமை கொண்டவர்களாக வளர்ச்சி கண்டனர். இன்று நமக்கு நன்கு பரிச்சயமான பாண்டு பத்திரம், அனைத்துலக வங்கி நிர்வாகம் ஆகியவற்றிற்குத் தொடக்கப் புள்ளியாக இவர்களது செயல்பாடுகள் அமைந்தன என்றால் அதனை மறுக்க முடியாது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக வளர்ச்சி கண்ட இவர்கள் சைப்ரஸ் தீவையும் வாங்கி அங்கு நைட் டெம்ப்ளர் தலைமையகத்தைக் கட்டினார்கள். மெடிட்டரேனியன் கடலில் மிக முக்கியமான நிலப்பகுதியில் சைப்ரஸ் தீவு அமைந்திருக்கின்றது என்பதே இதற்குக் காரணம்.
அயர்லாந்து இங்கிலாந்து தொடங்கி பிரான்ஸ் ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி கிரேக்கம் என பல நாடுகளைக் கடந்து வருகின்ற பாத யாத்திரிகர்கள் ஜெருசலேம் வரை வரும் போது அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு சைப்ரஸ் தீவில் அமைந்திருக்கும் தலைமை மையம் அமைந்தது இலகுவாக அமைந்தது.
கத்தோலிக்க தலைமை மையமான வாத்திக்கனில் தலைமை குருவான போப்பின் ஆதரவும் இவர்களுக்குத் தொடக்கத்தில் இருந்தது.
இந்த நூல் இப்போர் வீரர்கள் எப்போது எதற்காக உருவானார்கள்? இவர்களுக்கு ஜெருசலேம் மன்னரின் ஆதரவு எப்படி கிட்டியது? கத்தோலிக்க மத குருவின் ஆதரவு எப்படி கிட்டியது? அடுத்தடுத்து நடந்த சிலுவைப் போர்கள் போன்ற பல்வேறு தகவல்களை ஆண்டு வரிசையில் தெளிவாக எளிதாக விளக்குகின்றது.
டான் பிரவுனின் டா வின்சி கோட் நாவலில் குறிப்பிடப்படுகின்ற முக்கிய காரணமாக அமைவது நைட் டெம்பர் குழுவினரும் அவர்களின் தலைவரான கிராண்ட் மாஸ்டரும் போற்றி பாதுகாப்பது இயேசு கிறிஸ்துவின் ரத்த சம்பந்தத்திலான வாரிசுகளின் பாதுகாப்பு என்பதாக அமையும். ஆனால் இந்த நூலில் இது குறிப்பிடப்படவில்லை.
Holy grail அதாவது, புனித பாத்திரம் எனக் குறிப்பிடப்படுவது உண்மையிலேயே வைன் வைக்கப்பட்டிருந்த இயேசு கிறிஸ்து இறுதியாக அருந்திய வைன் நிறைந்த பாத்திரமா அல்லது அவர் சிலுவையில் அறையப்பட்டபோது அவரது உடலிலிருந்து வடிந்த ரத்தத்தைப் பிடிக்கப் பயன்படுத்திய கிண்ணத்தையா அல்லது வேறு ஏதேனும் மறைப்பொருளையா என்பது மர்மமாகவும் குழப்பமாக இருக்கின்றது என இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
இந்த நூலின் ஆசிரியர் நைட் டெம்ப்ளர் அமைப்பின் தற்போதைய கிரான்ட் மாஸ்டர் என்பதை நாம் மீண்டும் மனதில் கொள்ள வேண்டும். புனித பாத்திரத்தைப் பற்றி அவரது கருத்தாக அமைவது டான் பிரவுனின் நாவல் குறிப்பிடுகின்ற தகவலுக்கு மாறாகவும் அதே வேளை அது இல்லை என்பதை மறுக்காமல் அது மர்மமும் குழப்பமும் நிறைந்தது என்றும் கூறி முடிந்து விடுகின்றது. ஆக இதுவே மர்மமாகத்தான் இருக்கின்றது.
ஐரோப்பாவின் மிகப் புகழ்பெற்ற ராணுவ அமைப்பாக திகழ்ந்த நைட் டெம்ப்ளர் குழுவினர் 14ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவைச் சந்தித்தனர். பிரான்ஸ் மன்னன் நான்காம் பிலிப்ஸ் டெம்ப்ளர்ஸ் மீது பல்வேறு குற்றங்களைச் சுமத்தி அவர்களைப் பிடித்து கொலை செய்த நிகழ்வுகள் வரலாற்றின் இருண்ட பக்கங்கள். பிரான்ஸ் மன்னனின் சூழ்ச்சிக்கு வாத்திக்கணும் ஒத்துழைத்தது என்பது கூடுதல் அழுத்தத்தை இந்த அமைப்பிற்கு வழங்கியது.
அக்கால கட்டத்தில் ஐரோப்பா முழுவதும் இயங்கி வந்த நைட் டெம்ப்ளர் ராணுவ வீரர்களை பிரான்ஸ் மன்னனின் குழுவினர் சிறைபிடித்து அவர்களை ஒப்புதல் வாக்குமூலம் வழங்கச் செய்து பிறகு கொன்று குவித்தனர். அப்போது கொலையுண்டவர்களில் அன்றைய கிராண்ட் மாஸ்டர் ஜேக்கஸ் டி மோலெ அவர்களும் அடங்குவார்.
நைட் டெம்பள்ர் குழுவினர் 14ஆம் நூ தொடக்கத்தில் தேடித் தேடி கொல்லப்பட்டதன் காரணமாக அவர்களில் தப்பியவர்கள் ரகசியமாக தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். போர்த்துகல் மன்னர் வெளிப்படையாகவே இப்படி தப்பித்தவர்களைப் பாதுகாக்க அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் மறைமுகமான வாழ்க்கையை இவர்கள் தொடர்ந்தனர். பலர் ஐரோப்பா மட்டுமன்றி அமெரிக்காவிற்கும் புலம்பெயர்ந்தனர். அவர்களது தொடர்பு தொடர்ந்தது.
இன்று லண்டன் டெம்பிள் சர்ச் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சின்னமாக திகழ்கின்றது என்றாலும் அதன் பின்னணியில் எவ்வகை செயல்பாடுகள் நிகழ்கின்றன என்பது மறைவாகத்தான் உள்ளது.
No comments:
Post a Comment