Friday, June 18, 2021

பூப்புனித நீராட்டு விழா

 நேற்றைய எனது பதிவில் ஒரு நண்பர் ஏன் பெண்குழந்தைகளுக்கு மட்டும் பூப்புனித நீராட்டு விழா என்றும் இது உளவியல் விஷயமா என்றும் கேட்டிருந்தார். அதற்கு எனது கருத்தாக..

பண்டைய காலத்தில் இனக்குழுக்கள் பெண்கள் பூப்பெய்துவதைk குழந்தை பிறப்போடு தொடர்பு படுத்திப் பார்த்து இதனை ஒரு சடங்காக நிகழ்த்தினர். இனக்குழு தங்களுக்குள் ஒன்றிலிருந்து ஒன்று தொடர்பில் இருக்க தாய்மை அடையும் நிலையடந்த பெண் இங்கு இருக்கின்றாள் என செய்தி கூறும் ஒரு வழிமுறையாகவும் இதனைச் சொல்லலாம் . இதனால் அதே இனக்குழுவில் திருமணம் செய்து கொள்ள ஒரு பெண் தயாராகி இருப்பதை அறிவிக்க ஒரு உத்தியாக.
இன்றைய காலகட்டத்தில்...
மானுட சமூகம் மிக விரிவாக வளர்ச்சி கண்ட இச்சூழலில் இவ்வகை பூப்புனித நீராட்டு சடங்குகள் தேவையற்றவை. இவற்றை தவிர்ப்பது சிறப்பு.
விலங்குகளுக்குள்ளும் இதே வகை உடல் தயார் நிலை என்பது நிகழ்கிறது. இது இயற்கையின் ஒரு இயல்பான நிகழ்வு.
பெண்கள் எல்லா துறைகளிலும் காலூன்றி சாதனை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் பூப்புனித நீராட்டு என்பது அந்த இளம் பெண்ணுக்கு ஒரு வகையில் அவமானமான ஒரு நிகழ்வாகவே நான் கருதுகிறேன். அப்பெண் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ள மட்டுமே உள்ள இயந்திரம் அல்ல.
பெண்கள் சாதிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. ஆகவே பூப்புனித நீராட்டு செய்யலாமா வேண்டாமா .. தேவையா.. என்ற கேள்வியெல்லாம் விட்டு இதனை இயற்கையின் ஒரு பகுதி என இயல்பாக எடுத்துக் கொள்ள பழகிக்கொள்வது அவசியம்.
பூப்புனித நீராட்டு என்று சொல்லி ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழிப்பதும், படிக்கின்ற இளம் பெண்களின் மனதில் உடல் ரீதியான கவனத்தைச் திருப்புவதையும் தவிர்ப்போம்.
உலகின் ஏனைய இன மக்கள் இவ்வகை சடங்குகளிலுருந்து மீண்டு விட்டனர். பெண்களின் ஆளுமை பரப்பு பெரிது, விரிவானது. இவ்வகை உடல் ரீதியான சடங்குகளைத் தவிர்த்து விட்டு அறிவுப்பூர்வமான விசயங்களில் பெண்களையும் ஆண்கள் போலவே இயல்பாக பார்க்கும் பார்வை நம் தமிழ்ச்சமூகத்தின் இன்றைய ஒரு தேவை!
-சுபா
Muniasamy Pandian

No comments:

Post a Comment