Thursday, May 3, 2018

தமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்தமிழர் கோயிற்கலை கட்டுமான அமைப்பில் குடைவரைக் கோயில்கள்
முனைவர்.க.சுபாஷிணி / Dr.K.Subashini[1]Abstract

The political changes  in the ancient Tamil country has witnessed significant variations in culture, religion and arts. Pallava dynasty extended power in the northern and Chola region. The reign of Pallava king Mahendravarman-I (AD 600-630) witnessed change in art and temple architecture. The Mandagapattu rock-cut cave temple built by Mahendravarman-I in Villupuram district is considered the oldest of this kind in Tamil country. According to the Grandha inscription found in the Mandagapattu temple, Mahendravarman built a new type of temple architecture by avoiding materials such as bricks, timbers, metal and mortar which have been used vastly in the temple architecture. Rock-cut temples are also found in the Pandya region built at the same period. This Paper provides insight into several rock-cut temples of 6th to 8th century A.D. in Tamil Nadu, India. This article highlights the deteriorating present conditions of these temples with the aim to raise awareness for protection.முன்னுரை 

கட்டிட கட்டுமானக் கலை என்பது அழகியல் கலையின் ஒரு வடிவம். மனிதர்கள் வசிப்பதற்காக கட்டப்படும் கட்டிடங்களிலிருந்து அலுவல்கள் தொடர்பான பணிகளில் ஈடுபடு வதற்காகக் கட்டப்படும் கட்டிடங் களிலிருந்து வழிபாட்டு மையங்களின் கட்டிட அமைப்புக்கள் மாறுபடும். சமயங்களின் குறியீடுகளை மையப் படுத்தியே வழிபாட்டு கட்டிட கட்டுமானங்கள் அமைகின்றன. தமிழர் பாரம்பரியத்தில் காணப்படுகின்ற வழிபாட்டு மையங்களான ஆலயங் களின் கட்டிட கட்டுமானங்கள் தமிழக நிலப்பரப்பில் தோன்றிய மரபின் நீட்சியாகவே அமைகின்றன. உலகெங் கிலும் உள்ள தமிழர் வழிபாட்டு மையங்களாகத் திகழும் ஆலயங்கள் தமிழர் மரபின் அடிப்படையை ஒற்றிய வகையில் அமைக்கப்பட்டவை.

இந்திய ஆலய கட்டிட அமைப்பு மூன்று பெறும் பிரிவிற்குள் அடங்கும். சிற்பக்கலைஞர்கள் இந்த மூன்று பெறும் பிரிவுகளை நாகரம், வேசரம், திராவிடம் என வகைப்படுத்துவர். நாகரம் எனப் படுவது இந்தியாவின் வட நாட்டில் அமைக்கப்படும் கோயில் கட்டிட வகை. நருமதை ஆற்றுக்கு வடக்கே வட இந்திய நிலப்பகுதியில் அமைக்கப்படும் கோயில்கள் இவ்வகையானவை. அடுத்து வேசரம் எனப்படுவது பண்டைய இந்தியாவில் பவுத்த மதத்தோரால் கட்டி எழுப்பப்பட்ட ஒரு வகை கட்டிடக்கலை வடிவமாகும். பவுத்த விகாரைகளின் அமைப்பு  கட்டிடத்தில் தரையும் உடல்பகுதியும் நீண்ட அல்லது அரை வட்ட வடிவில் என அமைந்திருக்கும். இந்த வடிவத்தை தமிழ் நாட்டில் இன்றுள்ள சில கோயில் கட்டுமானக் கலைகளில் காணலாம்.  மூன்றாவது பிரிவானது திராவிடம் எனும் பிரிவு. இந்தியாவின் கிருஷ்ணா நதி முதல் தென்குமரி வரை காணப்படும் கோயில் கட்டிட கட்டுமான அமைப்பு இது. இதில் உட்பிரிவுகளாகத் தமிழர், சாளுக்கியர், ஹொய்சளர் முதலிய கோயில் கட்டுமானக் கலைகள் உள்ளன. இவற்றினுள், தமிழர் கோயில் கட்டு மானம் என்று மட்டுமே எடுத்துக் கொண்டால் அதில் இன்று நாம் காணும் வகைகளாக இருப்பவை பல்லவர் கால கட்டுமானம், பிற்கால சோழர் காலத்துக் கட்டுமானம், பாண்டியர் காலத்துக் கட்டுமானக் கலை, விஜயநகர அரசர்கள் காலத்து கட்டுமானக் கலை எனவகைப் படுத்தலாம் (மயிலை சீனிவேங்கட சாமி, 2003, p.36)


            திராவிடக் கோயில் கட்டுமானக் கலையில் தமிழர் மரபில் பல்லவர் காலத்தில் உருவானைJதான் குடைவரைக் கோயில் கட்டுமான அமைப்பு. இக்கட்டுரை, தமிழகத்தில் இன்று காணக்கிடைக்கும் சில குறிப்பிடத்தக்க குடவரைக் கோயில் களை விளக்குவதாகவும், கோயில் களின் தற்போதைய நிலையை அலசுவதாகவும் அமைகின்றது.


ஆய்வுப் பின்புலம்

இன்று நாம் காணக்கூடிய ஆலயங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்ற பொது வான கருத்து உலவுகின்றது. வரலாற்று நோக்கில் இந்த கருத்துக்கள் ஆராயப் படும் போது ஒரு கட்டுமானத்தின் வயது, அது கட்டப்பட்ட காலகட்டம் என்பன தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல் ஆய்வுகளின் வழி அறியக்கூடிய சாத்தியம் அமைகின் றது. ஒரு வழிபாட்டு மையம் இருந்த இடத்தில் அதன் தொடக்க நிலையில் கட்டப்பட்ட கட்டுமானம் சிதலம் அடைந்து போகும் போது அதன் சீரமைப்பு என்பது இயல்பானதே. ஆனால் கட்டுமானத் தொழில்நுட் பத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் காலத்துக்குக் காலம் கட்டுமான அமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்துள் ளன என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் ஒரு சமயத்தின் அடை யாளமான ஒரு கோயில் இருந்து பின்னர் அச்சமயம் வலு இழக்கும் போது புதிதாக வளர்ச்சியுறும் சமயத்தின் கோயிலாக அக்கோயில் கட்டிடமும் அதன் வளாகமும் மாற்றம் பெறும் நிகழ்வுகளும் நிகழ்ந் திருக் கின்றன. காலத்துக்குக் காலம் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் அறி முகப்படுத்தப்படுகின்ற வழிமுறை கள் கோயில் அமைப்பின் மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளன என்பதை இக்கட்டுரை வலியுறுத் துகிறது.            குடைவரைக் கோயில்கள் என்பன கோயில் கட்டுமான தொழில்நுட்பத்தில் மாபெரும் மாற்றத் தை உருவாக்கிய ஒரு தொழில்நுட்பம். இதற்குக் காரணம், இவ்வகை கோயில் அமைப்புக்கள் உருவாவதற்கு முன்னர் அமைக்க ப்பட்ட கோயில்கள், மரத்தினாலும், சுண்ணாம்பினாலும், மண்ணினாலும், செங்கல்லினாலும் அமைக்கப்பட்டவை. இப்படி மண்ணி னாலும், மரத்தினாலும் சுதையினாலும் அமைக்கப்பட்ட கோயில்கள் நெடுங் காலம் சேதப் படாமல் இருக்கும் சாத்தியம் இல்லை. இயற்கை சீற்றங்களினாலும் வேறு பல சமூக நிகழ்வுகளினாலும் இத்தகைய கோயில் கள் எளிமையாகத் தக்ர்க் கப்பட்டு சிதைக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்த மையால் இவ்வகைக் கட்டு மானங்கள் நீண்ட கால நிலைத் தன்மைக்கு உத்தரவாதம் அளிக்காத ஒரு நிலை இருந்தது. கட்டுமான அமைப்பில் ஒரு புரட்சியாக, நீண்ட காலம் சிதைவுறா வண்ணம் செதுக்கப்பட்ட ஆலயங் களாகத் திகழ் கின்றன குடைவரைக் கோயில் கள். இவ்வகைக் கோயில்கள் கோயிலின் நிலைத்தன் மையை உறுதி செய்தாலும், எல்லா இடங்களிலும் அமைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இல்லாமையினால் இதற்கு அடுத்த கட்ட தொழில்நுட்ப அமைப்பாக கற்பாறைகளால் அமைக்கப்பட்ட கோயில்கள், அதாவது கற்றளிகள் என்பவை உருவாகக் காரணமாகின. இவ்வகை கோயில் கட்டுமான தொழில்நுட்ப அமைப்பே இன்று வரை தொடரும் ஒரு கட்டுமான முறைக்கு அடிப்படையாகத் திகழ்கின்றது (நடன காசிநாதன், 2006, p.17) ஆக, குடைவரைக் கோயில்கள் வகையிலான அமைப்பு என்பது இன்றைய கற்றளி கோயில் அமைப்பு உருவாகுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்டவை என்பதும், இவை நெடுங்காலம் சிதலமுறாமல் இருப்பதை உறுதி செய்ய அமைக்கப்பட்டவை என்பதனையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. குடைவரைக் கோயில்கள் தமிழகக் கோயில் கட்டுமானக் கலையில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு கலை என்ற போதிலும், குறிப்பிட்ட ஒரு சில குடைவரைக் கோயில்களைத் தவிர ஏனையவை பலர் அறியப்படாத நிலையிலும், அவற்றுள் சில சிதல மடைந்தும் கவனிப்பு தேவைப் படும் நிலையிலும் தக்கப் பாதுகாப்பு வழங்கப்படாமலும் இருக்கின்றது என்னும் கருத்தையும் இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.ஆய்வுமுறை / Methodology

மேற்குறிப்பிட்ட நோக்கங்களை விளக்கும் வகையிலான கருத்துக்களை வெளிப்படுத்தும் நூல்கள் இக்கட்டு ரையில் ஆராயப்பட்டுள்ளன.  தமிழ் மூதறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களது நூல்களான, பௌத்தமும் தமிழும், மகேந்திரவர்மப்பல்லவன், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் போன்ற நூல்களோடு தமிழகச் சிற்பிகள் வரலாறு, கோபுரக்கலை மரபு, கல்வெட்டுக்கலை ஆராய்ச்சி போன்ற நூல்களும் இவ்வாய்வில் வாசிப்புக் குட்படுத்தப்பட்டன.            இக்கட்டுரை ஆசிரியர் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட களப்பணி ஆராய்ச்சியின் வழி அறியப்பட்ட நேரடி தகவல்களே இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன. களப்பணிகளின் போது தொல்லியல், அகழ்வாராய்ச்சி மற்றும் கல்வெட்டாய்வு அறிஞர்கள் வழங்கிய தகவல்களும் இக்கட்டு ரைக்குப் பக்கபலமாக இணைக்கப் பட்டுள்ளன.            தமிழகத்தின் காரைக்குடி, செஞ்சி மாவட்டம், மதுரை மாவட்டம், விழுப்புரம் மாவட்டம்  ஆகியபகு திகளில் கட்டுரை ஆசிரியரால் நேரடி களப்பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இக்களப்பணிகளின் போது கண்டறிய ப்பட்ட செய்திகளும், தமிழகத்தைச் சார்ந்த தொல்லியல் அறிஞர்களின் ஆய்வுச் செய்திகளும் http://www. Tamilheritage.org என்ற   இணையத் தளத்தில் வெளியிடப்பட்டு ள்ளன.குடைவரைக் கோயில் 1-மண்டகப்பட்டு மகேந்திரப்பல்லவன் சிவன் கோயில்

(பின்னினைப்பு 1-புகைப்படம் குடைவரைக் கோயில் அமைந்துள்ள பாறைப் பகுதியைக் காட்டுகின்றது)தமிழகத்தில் கோயில் கட்டிடக் கலையில், குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த நூற்றாண்டாக கி.பி.6ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி கி.பி7ம் நூற்றாண்டைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குடைவரைக் கோயில் எனப்படும் கட்டுமான அமைப்பு இன்றைய தமிழக நிலப்பரப்பில் தோன்றிய காலகட்டம் அது. தெற்கில் பாண்டியர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்க தொண்டை நாடு முழுமைக்கும் பல்லவர் ஆட்சி பரவி இருந்ததோடு சோழர்களின் நிலப்பகுதியையும் வெற்றி கொண்டு ஆட்சி செலுத்தி வந்தனர். பல்லவ மன்னர்களில் கி.பி. 600 முதல் 630 வரை தமிழ்நாட்டின் வடபகுதியை ஆண்டவன் மன்னன் மகேந்திரவர்ம பல்லவன். இவனே வரலாற்று ஆர்வலர்களால் முதலாம் மகேந்திர வர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்ப டுகிறான். (மராசுகுமார் & சரவணன், 2001, பp.8)


            மகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே. இம்மன்னனுக்கு விசித்திர சித்தன், சித்திரகாரப் புலி, மத்தவிலாசன் என ஏனைய பெயர்களும் உண்டு.மகேந்திரவர்மப் பல்லவன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவரைக் கோவிலின் கல்வெட்டில், தான் இதுவரை இருந்த கோயில் கட்டுமான முறையான, மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தி கோயில் அமைக்கும் முறை  என்பது அல்லாமல், பாறையைக் குடைந்து கோயிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். இந்த மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலே இம்மன்னன் குடைந்து எழுப்பிய முதல் குடைவரைக் கோயில். இதில் குடைவரைக் கோயிலின் ஆரம்ப கால அமைப்பு முறைகளை நன்கு காணலாம். (பின்னினைப்பு 2.-புகைப்படம்குடைவரைக் கோயிலின் முகப்புப் பகுதியைக் காட்டுகின்றது)            ஒரு பெரிய பாறையைக் குடைந்து அதனைப்பகுதி பகுதியாகப் பிரித்து தூண்கள், கருவiwப்பகுதி என அமைப்பது, அதே பாறை யிலேயே துவாரபாலகர் சிற்பத் தைச் செதுக்குவது, எனச் சோதனை முயற்சி போல இந்தக் கோயிலை உரு வாக்கியமையைக் காணமுடிகின்றது. இதே மகேந்திரவர்மன் உருவா க்கிய சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகா பலிபுரத்திலும் விழுப்புரம் மாவட்டத் திலும் காணலாம். (http://tamilheritage foundation.blogspot.my/2016/09/2016_17.html, 2016)


குடைவரைக் கோயில் 2-பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில்

(பின்னினைப்பு 3.-புகைப்படம் பாறை அமைந்துள்ள முகப்புப் பகுதியைக் காட்டுகின்றது)செஞ்சிக்கு அருகே உள்ள மண்ட கப்பட்டு, தளவானூர் போல பல்லவர்க்கால கோயில் கட்டுமானக் கலைக்குப் புகழ்ச்சேர்க்கும் ஒரு கோயில் பனைமலை தாளகிரீஸ்வரர் கோயில்.            செஞ்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றது "பனைமலை". இந்த குன்றுப்பகுதியைச் சார்ந்தார் போன்ற ஒரு பெரிய ஏரி அமைந்துள்ளது. மலையைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்கின்றன. இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதி இது. அருகாமையில் இருக்கும் விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்வதால் இந்தப் பகுதியும் இதன் சுற்றுப்புறப் பகுதியும் பசுமை குன்றாது கண்களைக்கவரும் எழிலுடன் திகழ்கின்றது.            காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் என்ற சிறப்பினைப் பெறும் 2ம் நரசிம்மவர்ம  பல்லவனால் (கி.பி.695-722) கட்டப் பட்டது  இந்தக் கோயில். இந்த மன்னன் இராசசிம்மன் என்றும் அழைக்கப்படுகின்றான். பல்லவ மன்னர்கள் கலைகளை வளர்த்த வர்கள். பாறைக் கோயில்கள், குடைவரைக்கோயில் கட்டுமானங்கள், பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக தெய்வ வடிவங்களை வடித்தல் ஆகியவற்றோடு கவின் மிகு ஓவியங்களையும் கோயில்களில் சுவர்ச் சித்திரங்களாக இணைக்கும் முயற்சி களையும் மேற்கொண்டனர் என்பதற்கு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலய பாறை ஓவியங்கள் சான்றாக அமைகின்றன.            கோயில்களைக் கட்டி இறை வழிபாட்டையும் கலைகளையும் போற்றியது போல வேளாண்மைக்கு உதவும் வகையில் ஏரிகளை அமைத்து விவசாயத்தை விரிவாக்கியதில் தமிழ கத்தில் பல்லவ மன்னர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அகன்று விரிந்து கடல் போலக் காட்சியளிக்கும் பனை மலை ஏரியும் இதற்குச் சான்றாக விளங்குகின்றது.            காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலைப் போலவே கோயில் சன்னிதானத்தில் சுவர் ஓவியங்களை இக்கோயிலிலும் தீட்டி இருக்கிறார்கள். அதற்கான சுவடுகள் ஆங்காங்கே இன்றும் தெரிகிறன. இந்தக் கோயிலின் சிறப்பு எனக் கருதப்படுவது கோயிலுக்கு இடப் பக்கம் உள்ள சன்னிதியில் தீட்டப் பட்ட உமையம்மையின் ஓவியம். ஓவியத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்தாலும் கூட இன்றும் ஓரளவு காணக்கூடிய வகையில் இந்த ஓவியம் இருக்கின்றது என்பது ஆறுதல் அளிக்கும் ஒன்று (http://tamilheritage foundation.blogspot.my/2016/11/2016_26.html, 2016).குடைவரைக் கோயில் 3-ஆனைமலை ஸ்ரீயோகநரசிம்மர் கோயில் 

ஆனைமலை மதுரைக்கு அருகில் இருக்கின்றது. சமணத்தின் சுவடுகள் பல நிறைந்த ஒரு பகுதியாக ஆனைமலை விளங்குகின்றது. மதுரை பகுதியில் சமண முனிவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். பள்ளிகள் அமைத்து சமண நெறிகளை போதித்து வந்தனர். 6ம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் எதிரான மிகப் பெரிய புரட்சி தோன்றியது. இது பக்தி காலம் என்று சைவர்களால் சிறப்பித்து அழைக்கப் படும் ஒரு காலகட்டத்தின் தொடக்க காலமாகும். சமணர் இருக்கும் இடங்களுக்கு அருகிலேயே மலை களில் குடவரைகளைச் சைவ சமயத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் அமைத்தனர். பெரும்பாலான குடைவரைகள் சிவபெருமானுக்கு இருப்பவையே. இங்கே சிறப்பாக வைண சமயத்தை போற்றும் வகையில் நரசிம்ம பெரு மாளுக்கு ஒரு குடவரைக் கோயில் கட்டியிருக்கின்றனர்.            நரசிம்ம பெருமாளின் மிகப் பெரிய உருவத்திலான புடைப்புச் சிற்பம் mரிய வடிவத்தில் அமைக் கப்பட்டிருக்கின்றது. முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் இது கட்டப்பட்டது. சுவர்களில் இரண்டு புறமும் வடமொழியில் கிரந்ததிலும் மற்றொரு சுவற்றில் தமிழில் வட்டெழுத்திலும் கல்வெட்டுக்கள் உள்ளன. முதலாம் வரகுண பாண்டியன் காலத்தில் மன்னனுக்கு அமைச்சராக இருந்தவன்  மாறங்காரி என்பவன். அவன் இந்தக் குடைவரையை அரசரின் துணையோடு குடைந்திருக்கின்றான்.  இது நிகழ்ந்தது ஏறக்குறைய கி.பி.770ம் ஆண்டில். மாறங்காரி இப்பணி முடிவதற்கு முன்னரே இறந்து விடுகின்றான். அதன் பின்னர் அவனது சகோதரனே இப்பணியை முடித்தான் என்பதை இக்கோயில் கல்வெட்டு குறிப்பிடு கின்றது.            அகன்ற தாமரைக்குளத்தோடு ஒட்டியபடி இந்தக் குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் வடக்கே, தெற்குதிசை நோக்கியபடி அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை, முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தரும் வடிவில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார் சன்னிதி உள்ளது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு பகுதியகும்.            அடுத்து கருட மண்டபம்; மகா மண்டபம்; முன்மண்டபம். இவற்றைக் கடந்து உள்ளே செல்ல சிறிய கருவறையில், யோகாசன நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோகநரசிம்மர். பின்னிருகரங் களில் சங்கு-சக்கரம் திகழ, முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்திருக்கும் வகையில் அமைக் கப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மர் வடிவம் இது.

                                                                                                                                         கருவறைக்கு இருபுறமும் அகன்ற மிக உறுதியான வடிவிலான பாறைகள் உள்ளன. இக்கல்வெட்டின் செய்திகள் ஒரு புறம் வட்டெழுத்து தமிழிலும், மறுபுறம் கிரந்தத்தில் சமஸ்கிருதத்திலும் வழங்கப்பட்டுள்ள (http://tamilheritagefoundation.blogspot.my/2015/01/2015.html, 2015).குடைவரைக் கோயில் 4-லாடன் கோயில் குடைவரைக்கோயில்

மதுரையில் ஆனைமலைக்கு அருகே தொடர்ச்சியாக வரும் பாறை அமைப்பின் ஒரு பகுதியில் அமைந் திருக்கின்றது லாடன் கோயில். திருப்பரங்குன்றம் கோயிலைப் போல முருகனுக்காக எடுக்கப்பட்ட குடை வரைக் கோயில் என்ற சிறப்பினை இந்த  லாடன் கோயில்  குடைவரைக் கோயில் பெறுகின்றது. 7, 8ம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர் களால் கட்டப்பட்டது இக்குடைவரைக் கோயில். வேறு தெய்வங்கள் இல்லாமல் முருகனுக்கு மட்டுமென்று தனிப்பட்ட வகையில் இருக்கும் ஒரே குடைவரை கோயில் இது என்ற தனிச்சிறப்பும் பெறுகின்றது இக்குடை வரைக் கோயில். முருகனோடு வள்ளிக்குச் சிற்பம் இல்லாமல், தெய்வானை மட்டுமே இருக்கும் வகையில் புடைப்புச் சிற்பமாக முருகனின் வடிவம் அமைக்கப்பட்டி ருக்கின்றது. கருவரை க்கு வெளியே இரண்டு துவார பாலகர்களும், மயிலும் சேவலும் இருக்கும் புடைப்புச் சிற்பங்களும் இங்குள்ளன.            அர்த்த மண்டபத்தில் இரண்டு முழுத்தூண்களையும் இரண்டு அரைத் தூண்களையும் செதுக்கியிருக் கின்றனர். உள்ளே கருவரையில் மாடத்தில் புடைப்புச் சிற்பமாக தெய்வானையுடன் அமர்ந்த நிலையில் மூல சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது   (http://tamilheritagefoundation.blogspot.my/2015/05/2015_23.html, 2015).குடைவரைக் கோயில் 5-மலையடிப்பட்டி குடைவரை கோயில்

மதுரையைப் போலவே புதுக்கோட்டை யிலும் சில குடைவரைக் கோயில்கள் உள்ளன.   திருச்சியிலிருந்து ஏறக்கு றைய 45 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் மலையடிப்பட்டி.  இது புதுக் கோட்டையைச் சார்ந்த கிராமம். இங்கு எழில் நிறைந்த இயற்கைச் சூழலில் ஒரு மாபெரும் பாறையில் இரண்டு கோயில்கள் ஒன்றாக என இணைந்து ஒரு குடைவரைக் கோயில் அமைந்திருக்கின்றது.  ஒன்று சிவ பெருமானுக்காகவும் மற்றொன்று அனந்தபத்மநாப சுவாமிக்காகவும் என அமைக்கப்பட்ட கோயில்கள் இவை. இக்கோயில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த  தந்திவர்மன் எனும்  பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அறிய முடிகின்றது.            இக்கோயிலின் உள் அமைப்பு புதுக்கோட்டையில் இருக்கும் திருமயம் ஆலயத்தை வடிவத்தில் ஒத்திருக்கின்றது. தெளிவாக செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் சுவற்றிலும் தூண்களிலும் நிறைந் திருக்கின்றன. 15 அடி உயரத்தில் மூலவர் சிலை   செதுக்கப்பட்டி ருக்கின்றது. மூலவர் சிலையைச் சுற்றிலும் தேவ கணங்களும் தெய்வ வடிவங்களும் என்ற வகையில் ஒரு கலைப்பொக்கிஷமாக இந்தச் சுவர் காட்சியளிக்கின்றது.            இக்கோயிலில் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. அதில் ஒரு கல்வெட்டு கிபி.960ம் ஆண்டைச் சேர்ந்தது. இது சோழ மன்னன் ராஜகேசரி சுந்தரச் சோழனின் கால கல்வெட்டு.            இந்தக் குடைவரை கோயிலின் அருகில் இருக்கும் பிரமாண்ட வடிவ பாறைகளின் மேல் சமணப் படுகைகள் வரிசை வரிசையாக அமைக்கப் பட்டிருக்கின்றன. கிபி. 7க்கு முன்னர் இப்பகுதியில் சமண சமயம் மிக விரிவாக பரவி செழித்து இருந்திருக்க வேண்டும் என்பதை இந்த சமணப் படுகைகள் நமக்கு உணர்த்துகின்றன. இக்கோயில் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பினை உணர்த்தும் கலைக் கோயில்கள் பட்டியலில் ஒன்றாக இடம்பெறுகின்றது. எண் 134, 135 http://asi.nic.in/asi_monu_alphalist_tamilnadu.asp.இக்கோயிலைப் பற்றிய மிக விரிவான கட்டுரை ஒன்று வரலாறு.காம் வலைப்பக்கத்தில் உள்ளது (http:// tamilheritagefoundation.blogspot.my/2014/03/2014_27.html, 2014).

குடைவரைக் கோயில் 6-மசிலீச்சுரம் சிவன் கோயில்

குன்றக்குடி நகரில், குன்றக்குடி மடம் அமைந்திருக்கும் பகுதியின் பின் பகுதியில் சற்றே  தொலைவில் குன்றக்குடி முருகன் கோயில் சித்திரக்கூடம் அமைந்திருக்கும் பகுதியில் இக்குடைவரைக் கோயில் உள்ளது.

            இக்குடைவரைக் கோயிலின் முன் பகுதியில் கற்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த முன்பகுதியைக் கடந்து உள்ளே சென்றால் அர்த்த மண்டபமும் அதன் உள்ளே  பிரகார சன்னிதியும் உள்ளன. இந்த ஒரு குடைவரைக் கோயிலின் உள்ளே  தனித்தனியாக மூன்று  கோயில்கள் இருக்கின்றன. இந்த மூன்று தனித்தனி கோயில் களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்திருக்குன்றன. அவற்றின் கருவரைப்பகுதியில் சிவலிங்க வடிவங்கள் கற்குகைக்குள் குடையப்பட்ட வடிவில் அமைந் திருக்கின்றன.

            கோயிலின் உட்பகுதி கற்பாறையின் ஒரு பகுதி சுவர் போன்று வெட்டப்பட்டுள்ளது. இதனைக் குடைந்து இதில் நின்ற வடிவத்தில் இருக்கும் முருகனின் புடைப்புச் சிற்பத்தைச் செதுக்கியுள்ளனர். இந்த முருகனின் சிற்ப அமைப்பு கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டை சேர்ந்தது.  இச்சிற் பத்தை முருகன் சிற்பம்தான்  எனக் கண்டறிய உதவும் வகையில் இதற்கு நேரெதிரே விநாயகரின் சிலை ஒன்று புடைப்புச் சிற்பமாக அமைக் கப்பட்டுள்ளதைக் கொள்ளலாம்.  முருகன் சிற்பத்திற்கு நேர் எதிராக விநாயகர் புடைப்புச் சிற்பம் உள்ளது. இது வலம்புரி விநாயகர் சிற்பம். பிரம்மா, பெருமாள், சிவன் சிற்பத் தொகுதி ஒரு தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. முதலில் பெருமாள் நின்ற வடிவத்தில் இருக்கும் புடைப்புச் சிற்பம் உள்ளது.  கருங்கல் சிற்பத்தின் மேல் வர்ணச் சாயம் பூசப்பட்டு அது தற்சமயம் சிதிலம் அடைந்த நிலையில் இப் புடைப்புச் சிற்பம் காட்சியளிக்கின்றது.  இதற்குப் பக்கத்தில் விஷ்ணுதுர்க்கையின் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. வலது கைகளில் ஒன்றில் சக்கரத்தையும் இடது கைகளின் ஒன்றில் சங்கினை ஏந்திய வகையிலும் இச்சிற்பம் உள்ளது.

            விஷ்ணு துர்க்கையின் இடதுபுறத்தில் நின்ற கோலத்தில் சங்கரநாராயணன் வடிவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கபப்ட்டுள்ளது. சைவம் வைணவம் ஆகிய இரு பெரு சமயங்களையும் இணைக்கும் நோக்கத்துடன் எழுந்ததுதான் சங்கரநாராயணன் வடிவம். இந்த இரு வேறு சமயங்களுக்கும் போட்டி சமயமாக சமணம் இருக்க, அதனை வீழ்த்த சைவமும் வைணவமும் இணைந்து கைகோர்த்து செயல்படுவது உதவும் என்ற நோக்கத்தின் வெளிப்பாடாகவும் இதனைக் காணலாம்.

            சங்கரநாராயணன் சிற்பத்திற்கு அடுத்தாற்போல நடராசர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.  இச்சிற்பம் பொதுவாக நாம் காணும் நடராசர் சிற்பம் போலல்லாது இரண்டு கால்களையும் சதுரமாக நிலத்தில் குத்தி நிற்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. இது சதுரநடனம் எனக்கூறப்படுவது. நடராசர் எட்டு கைகளுடன் இருக்க, கீழே குள்ள பூதகணங்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் வகையில் நடராசர் சிற்பத்தொகுதி செதுக்கப்பட்டுள்ளது.

             வெளிப்புறப்பகுதியைக் கடந்து பிரகாரப் பகுதியில் தனித்தனியாக சன்னிதிகள் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண் டபத்தைத் தாண்டி உள்ளே பாறையைக் குடைந்து அதனுள்ளேயே சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்பகுதியில் மேலும் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. சிறு பாறையைக் குடைந்து சற்றே சிறிய வடிவிலான சிவலிங்கம் ஒன்று அங்கு செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கத்தின் முன்னர் இரு துவாரபாலகர்கள் வடிவமும் செதுக் கப்பட்டுள்ளது. முதல் குடைவரைக் கோயிலின் துவாரபாலகர்கள் சிற்பத்தை விட இவை உருவத்தில் சிறியனவாகவே உள்ளன.  குடைவரைக்கோயிலின் பிரகாரத்தின் படியானது, அர்த்தசந்திர வடிவில் அறை வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது குடைவரைக் கோயில்களில் உள்ள கட்டுமான அமைப்பின் பொதுக்கூறுகளில் ஒன்று எனலாம்.  அதனையே இங்கும் காண்கின்றோம்.

            இக்கோயில் கட்டுமானக் கலையை நோக்கும் போது, இது கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதைக் காட்டும் வகையில் அதன் அமைப்பு உள்ளது.  பட்டையான அமைப்பில், பருத்த நீள்சதுர வாக்கில் குடைவரைக் கோயிலின் உட்பகுதி கற்பாறைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் பிற்காலச் சோழர்கள் தங்கள் கல்வெட்டுக்களைப் பொறிக்கச் செய்துள்ளனர். ராஜராஜ சோழனின் கல்வெட்டினைக் குறிக்கும் "ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந்..." எனத் தொடங்கும் கல்வெட்டு இக்கோயில் தூண்களில் காணப்படுகின்றது. முத லாம் ராஜராஜனின் காலத்தில் பாண்டிய நாடும் சோழ மன்னனின் கீழ் இருந்தது. ஆக, இக்கோயிலுக்குக் கொடை வழங்கிய போது அதனைப் பதிந்து வைக்கும் வகையில் கல்வெட்டுக்கள் அச்செய்திகளைத் தாங்கி பொறிக்கப்பட்டுள்ளன.

            ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுக்களை அடுத்து, இதே கோயிலில் முதலாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் அமைந்துள்ள பிற்கால சோழமன்னர்களின் கல்வெட்டுக் களாவன  நல்ல வளர்ச்சி பெற்ற தமிழ் எழுத்துக்களால் ஆனவை. இக்கல்வெட்டுகள் மட்டுமன்றி பாண்டிய மன்னர்களின் ஆதரவில் இக்கோயில் கட்டப்பட்டபோது பொறிக்கப்பட்ட வட்டெழுத்து கல்வெ ட்டுக்கள் சிலவற்றையும் இக்கோயிலில் காண முடிகின்றது. அதில் ஒரு கல்வெட்டு மசிலீச்சுவரம் என்ற பெயரைத்தாங்கியிருக்கின்றது.  மசிலீச் சுவரம் என்பது மயில் + மலை + ஈச்சுவரம் என்ற பொருளைக் குறிப்பது.  இக்கல்வெட்டு இக்கு டைவரைக் கோயிலின் காலத்தைச் சரியாகக் கணக்கிட உதவுவதாக அமைந்திருக்கின்றது. இந்த வட்டெ ழுத்து வடிவத்தை  நோக்குங்கால் இது கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என முடிவுக்கு வரலாம்
(http://tamilheritagefoundation.blogspot.my/2015/01/2015.html, 2015)குடைவரைக் கோயில் 7-அரிட்டாபட்டி சிவன்கோயில் - லகுலீசர் சிற்பம்

(பின்னினைப்பு 4.-புகைப்படம் குடை வரைக் கோயில் முன்புறத்தில் உள்ள லகுலீசர்சிற்பத்தைக்காட்டு கின்றது)

            அரிட்டாபட்டி மதுரையில் நரசிங்கம்பட்டிக்கு வடக்காக சுமார் 4 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் ஊர். மேற்கில் கழிஞ்சமலை என அழைக்கப்படும் மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கின்றது அரிட்டாபட்டி. விவசாயிகள் நிறைந்திருக்கும் இப்பகுதி நெற்பயிற்கள் நிறைந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றது. இப்பகுதியில் தான் அமைந் திருக்கின்றது அரிட்டாபட்டி குடைவரைக் கோயில்.  வாகனத்தைச் சாலையில் தூரத்தே நிறுத்தி விட்டு வயல் வரப்பில் நடந்து வரும்போது தூரத்தே செங்குத்தான பாறைகளைப் பார்த்துக் கொண்டே வந்தால் அதன் பின்னால் பாறைகளைக் குடைந்த வகையில் இக்குடைவரைக் கோயில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

            இக்குடைவரையைப் பற்றிய கல்வெட்டுக்கள் இங்கு காணப்பட்ட வில்லையெனினும், இக்குடைவரைக் கோயிலின் அமைப்பைக் கொண்டு இது கி.பி.7 அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர்கள் குடைவித்த கோயில்தான் என்பதை தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.  தெளிவான கல் வெட்டுக்கள் இல்லாத போதிலும், இக்கோயிலின் முன்புறத்தில் முற்கால தமிழ் எழுத்துக்களின் சில வரிகள் எழுதப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது. கல்வெட்டாகச் செதுக் குவதற்காக எழுதப்பட்டு பின்னர் முழுமைப்படுத்தப்படாமல் போன நிலையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. (இரா சேந்திரன் & சாந்தலிங்கம், 2010, p.74)

            இந்தக் கோயிலின் சிறப்பு இங்கு முற்பகுதியில் அமைக்கப் பட்டிருக்கும் லகுலீசர் சிற்பமாகும். தலையில் கரண்ட மகுடத்துடனும், மார்பில் பட்டையான யக்ஞோபவீ தத்துடனும் லகுலீசர் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார்.

            அடர்ந்த பாறைப்பகுதியில் குடைந்தெடுக்கப்பட்ட உட்பகுதி இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ள்ளன. கருவறைக்குள் சிவலிங்கம் பாறையைச் செதுக்கி உருவாக்கப் பட்டுள்ளது. கருவறைக்கு முன்னே வலப்பக்கம் லகுலீசரின் சிற்பமும் இடப்பக்கம் விநாயகரின் சிற்பமும் மட்டுமே இங்கே செதுக்கப்பட்டுள்ளன.

            லகுலீசர் கி.பி.2ம் நூற்றாண்டு வாக்கில் குஜராத் மாநிலத்தின் காரோஹணம் என்ற ஊரில் பிறந்தவர். பவுத்தமும், சமணமும் தமிழகத்தில் விரிவாகப் பரவியிருந்த காலகட்டத்தில் லிங்க வழிபாட்டைப் புதுப்பித்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.  லகுலீசர் உருவாக்கிய சைவ சமயத்தின் பிரிவு பாசுபத சைவம் என அழைக்கப்படுவது.  சிவபெருமானே லகுலீசராக அவதாரம் செய்தார் என்று ஏகலிங்கி என்ற ஊரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. லகுலீசரின் பாசுபத சித்தாந்தத்தை அடிப்படை யாகக் கொண்டு  லிங்க வழிபாடு தொடங்கப்பட்ட இடங்கள் காரோஹணம் என்றே வழங்கப்பட்டன. தமிழகத்தில் பக்தி இயக்கக் காலத்தில் காரோஹண சைவம் நிலை பெற்றிருந்தது.  நாகைக் காரோஹணம், குடந்தைக் காரோஹணம், கச்சிக் காரோஹணம் ஆகிய மூன்றுமே அவை.  இறைவனே இறங்கி மானுட வடிவில் வந்து அவதரிப்பதையே காரோஹ ணம், அதாவது காயமாகிய உடல் கீழே இறங்கி வருதல் என்ற பொருளாகின்றது (பத்மாவதி, 2003, பக் 67).

            தமிழகத்தில் சிவலிங்க வழிபாடு பக்தி இயக்கக் காலத்தில் கோயில்களில் விரிவடைந்தமைக்கு பாசுபத கொள்கை அடிப்படையாக அமைந்தது. சைவத்தை அரசியல் மதமாக ஏற்ற பாண்டியர்களும் பின்னர் சோழர்களும் சிவ வழிபாட்டினை விரிவாக்கும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிர்மானித்தார்கள். பெரிய கற்கோயில்கள் தொடங் கப்பட்ட காலமாகிய கி.பி.8ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்திற்கு முன்னர் குடைவரைக்கோயில்களில் சைவசமயத்தின் குறியீடாகிய சிவலிங் கங்கள் பிரதிஷ்டை செய்யப் பட்டு வழிபாடு நடந்த இடங்களாக அமைந்தன (பத்மாவதி, 2003, p.73) தமிழக வரலாற்றில் சைவ சமய வரலாற்றிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குடைவரைக் கோயிலாக இந்த அரிட்டாபட்டி குடைவரைக் கோயில் திகழ்கின்றது
(http://tamilheritagefoundation.blogspot.my/2017/06/2017.html, 2017)


குடைவரைக் கோயில் 8-குன்னத்தூர் உதயகிரீசுவரர் சிவன் ஆலயம்
(பின்னினைப்பு 5.-புகைப்படம்குடை வரைக் கோயிலின் முகப்புப் பகுதியைக் காட்டுகின்றது)


மதுரை வடக்கு வட்டத்திற்குள் அடங்கிய சிற்றூர் குன்னத்தூர். முற்காலப் பாண்டியர் காலத்தில் ஏறக்குறைய ஒன்பது அல்லது 10ம் நூw;whz;L வாக்கில் இவ்வூர் குன்றத்தூர்க் குளக்கீழ் என்ற நாட்டுப் பிரிவுக்குட்பட்ட பிரமதேய  கிராம மாகத் திகழ்ந்துள்ளது. இன்று குன்னத்தூர்   மலை என்று அழைக் கப்படும் குன்றில் இந்தக் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது.

            குன்றின் கிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்கும் கிழக்குத் திக்கை நோக்கியதாக அமைக்கப்பட்டுள்ள மையால் உதயகிரீசுவரர் என்ற பெயர் இந்த சிவாலயத்திற்கு வழக்கில் உள்ளது (இராசேந்திரன் & சாந்தலிங்கம், 2010, பp.76) வித்தியாசமான வடிவில்  தெற்கு நோக்கிய பாறையில் நின்ற நிலையில் இருக்கும் விநாயகர் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது.பிற்கால நந்தி சிற்பம் ஒன்றும் கோயிலுக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்குள் பாறையைச் செதுக்கி சிவலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது

 (http://tamilheritagefoundation.blogspot.my/2017/04/2017_29.html, 2017).


மதிப்பீடு


தமிழக கோயில் கட்டுமானக் கலைகளில் கி.பி 6ம் நூற்றாண்டு தொடங்கி குடைவரை கோயில்கள் பரவலாக தொண்டை நாடு, சோழர் நாடு, பாண்டிய நாடு ஆகிய பகுதிகளில் மன்னர்களின் பேராத ரவுடன் கட்டப்பட்டமையைக் காண் கின்றோம். பாண்டிய மன்னர்களும் பல்லவ பேரரசும் சைவத்தையும் வைணவத்தையும் ஆதரிக்கத் தொடங்கிய கால கட்டமே குடைவரைக் கோயில்களின் தொடக் கத்திற்குக் காரணமாக அமைகின்றன. கி.பி.7ம் நூற்றாண் டுக்குப் பின்னர் குடைவரைக் கோயில்கள் கற்றளி கோயில்களாக, அதாவது பாறை களைக் குடைந்து சிற்பங்களை உருவாக்குவதற்கு பதிலாக, கற்களை தனித்தனேயே செதுக்கி தரைப்ப குதிகளில் வைத்து அடித்தளம், விமானம், கோபுரங்கள் என புதிய கட்டுமானக் கலை உருவாக்கம் தொடங்குகின்றது. கி.பி.6ம் நூற்றாண்டு காலகட்டத்தில் செதுக்கப்பட்ட குடைவரைக்கோயில்கள் பல இன்று தமிழக தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னங்கள் என்ற பட்டியலில் அடங்குகின்றன. இருப்பினும் இங்கு இக்கட்டிடங்கள் சீரமைப்பு பணி தேவைப்படும் நிலையில் இருப்பதையே நேரடி களப்பணி அனுபவம் காட்டுகின்றது. தமிழர் கோயில் கட்டுமானக் கலையில் மிகச் சிறப்பித்துக் கூறப்பட வேண்டிய ஒரு வகையாக குடைவரைக் கோயில் கட்டுமானக் கலை திகழ்கின்றது.


முடிவுரை

தமிழகக் கோயில் கட்டுமானக் கலை அமைப்பில் தனித்துவம் பெறும் குடைவரைக் கோயில் அமைப்பினை முழுமையாக பட்டியலிட்டு, புகைப்படங்களைச் சேகரித்து, விழியப்  (Video)  பதிவுகளாக்கி ஆராய்ந்து வெளியிடும் முயற்சிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. இவ் வெளியீடுகள் http://www.tamilheritage.org என்ற வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழகக் குடைவரைக் கோயில்களின் முழுமையான தொகுப்பு இதுவரை வெளிவரவில்லை என்ற குறைய நிவர்த்தி செய்யும் வகையில் முழுமையாக தமிழகத்தின் அனைத்து குடைவரைக் கோயில்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டு அவை தொகுப்பாக்கப்பட்டு நூல் வடிவில் வெளியிடப்பட வேண்டிய தேவை அவசியமாகின்றது!.


References

 1. Irasenthiran, P. & Santhalingam, S. (2010), Mamathurai. Madurai: Pandiya Naddu Varalaru        Aivu Maiyam.
 2. Nadana Kasinathan. (2006 ). Tamilaga Sirpigal Varalaru. Chennai: Thachina Kalai Nuul             Pathipagam.
 3. Pathmavathi, R. (2003). Saivathin Thotram.  Chennai: Kumaran Book House.
 4. Rasukumar, M.,T., & Saravanan, P. (2001). Mayilai Seeni Vengkadasamy Aivuk Kadduraigal. (Vol.2). Chennai: Makkal Veliyidu.
 5. Seeni Vengkadasamy, Mayilai. (2003). Nun Kalaigal. Chennai: Pumbukar Pathipakam.
 6. Seeni Vengkadasamy, Mayilai. (2003). Tamilar Valartha Azhakuk Kalaigal. Pavai Publications.
 1. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=658
 2. http://tamilheritagefoundation.blogspot.my/2014/03/2014_27.html
 3. http://tamilheritagefoundation.blogspot.my/2015/05/2015_23.html
 4. http://tamilheritagefoundation.blogspot.my/2015/01/2015.html
 5. http://tamilheritagefoundation.blogspot.my/2016/11/2016_26.html
 6. http://tamilheritagefoundation.blogspot.my/2016/09/2016_17.html
 7. http://tamilheritagefoundation.blogspot.my/2017/06/2017.html
 8. http://tamilheritagefoundation.blogspot.my/2017/04/2017_29.html
2 comments:

 1. வாழ்த்துகள். மிக சிறந்த பணி. அற்புதமாக தொகுக்கப்பட்ட படைப்பு. கடின உழைப்பு, தேடல் வேட்கை , முறையான தொகுப்பு. Is it possible to have comparative table ?

  ReplyDelete
 2. Very good Journal. Congratulations.I have noticed a fact from this article is,apartfrom the construction technology of temple,if someone comes from Gujrat area may confuse and convert the people towards them.��

  ReplyDelete