Saturday, November 12, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 104

நல்ல பணிகளைச் செய்யும் போது ஏதேனும் நன்மைகள் நம் வாழ்வில் நிச்சயம் நடக்கும். சிரமங்கள் பல நிறைந்ததுதான் நம் வாழ்க்கை என்ற போதிலும் நன்மையை நினைத்து கடின உழைப்பினைச் செலுத்தினால் நற்பயன்கள் காலம் தாழ்ந்தாலும் கூட நிச்சயமாகக் கிடைக்கத்தான் செய்யும். உ.வே.சா விற்கும் இத்தகைய நன்மைகள் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்வில் நடந்திருக்கின்றன.

கடந்த பதிவில் சிந்தாமணி பதிப்புப் பணியை முடித்ததும் அவருக்கு மறுநாள் காலை ஒரு பரிசு கிடைத்தது எனக்குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதனைப் பற்றி இந்தப் பதிவில் விளக்குகின்றேன்.

இன்றைக்கு உ.வே.சா தமிழுலகில் அறியப்படுவதற்கு முக்கியக்காரணமாக அமைவது அவரது சங்க இலக்கிய நூற்பதிப்புக்கள் எனலாம். சங்க இலக்கியத்தைப்பற்றிய பரவலான தகவல் தமிழறிஞர்கள் மத்தியில் இல்லாத காலகட்டம் இது. உ.வே.சா.சிந்தாமணி பதிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் தாம் சந்திக்கும் அன்பர்களிடமெல்லாம் அவர்களுக்கு ஏதாகினும் ஒரு வகையில் ஓலைச்சுவடி கிடைத்தால் அவற்றை தமக்கு தருமாறு சொல்லி அதற்குப் பணமும் தாம் தருவதாகச் சொல்லியிருந்தார். இந்தத் தகவலை அறிந்த ஒருவர்தான் உ.வே.சாவைத் தேடிக் கொண்டு ஒரு தமிழ்ச்சுவடி நூல் கட்டுடன் அவரைக் கண்டு இந்த நூலை ஒப்படைத்து விட்டு பணம் பெற்றுச் செல்ல வந்திருந்தார்.

வேலூரில் இருந்த குமாரசாமி ஐயர் என்ற ஒருவர் இந்த நூலை ஏழை வித்துவான்களின் வீடுகளிலிருந்து சேகரித்ததாகவும் அப்படிக்கிடைக்கும் சுவடிகளை தேவைப்படுவோருக்கு விற்று பணம் ஈட்டி வாழ்பவர் என்றும் வந்தவர் மூலம் உ.வே.சா அறிந்து கொண்டார்.

அப்படிக் கொண்டு வந்த அந்த மனிதர் கையில் இருந்த சுவடி நூல் சங்க இலக்கிய நூற்களில் ஒன்றான பத்துப்பாட்டு. இதைப்பார்த்ததும் எத்தகைய மகிழ்ச்சி உ.வே.சாவின் மனத்தை நிறைத்திருக்கும் என ஊகிக்க முடிகின்றதல்லவா? அதிலும் சிந்தாமணிப்பதிப்புப் பணியை அல்லும் பகலும் உழைத்து அதனை முடித்து நூல் கையில் வருகின்ற அன்னாளில் உ.வே.சாவிற்குக் கிடைத்த அரும் பரிசு இந்தப் பத்துப்பாட்டு சுவடி நூல். இந்தச் சுவடி நூலைத்தாம் பார்த்த வேளையில் தம் மனதில் எழுந்த உணர்ச்சிகளை இப்படிப்பதிகின்றார் உ.வே.சா.

‘தமிழன்னையே இவர் மூலம் மேலும் தமிழ்த் தொண்டுபுரிய வேண்டுமென்று கட்டளையிடுகிறாள்’ என்று கருதினேன். உடனே அவர் விரும்பியபடி அவர் கையில் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்து அனுப்பினேன்.

“தாயே, நீ சிந்தாமணியை இந்த ஏழை முகமாக மீட்டும் அணிந்துகொண்டாய். பிற ஆபரணங்களையும் அடியேன் கைப்படும்படி செய்து அவற்றைத் துலக்கும் கைங்கரியத்திலே திருவருளைத் துணையாக வைத்துப் பாதுகாக்க வேண்டும்” என்று மனப்பூர்வமாகத் தமிழ்த்தாயை வேண்டிக் கொண்டேன்.

பத்துப்பாட்டு கிடைத்த பின்னர் அதனை அச்சு நூலாக வெளிக்கொணரும் முயற்சிகளில் ஈடுபட்டதோடு ஏனைய சங்க இலக்கிய நூற்களையும் தேடித்தேடி அவற்றை அச்சு நூலாக்குவதை தம் வாழ்க்கையின் மைய நோக்கமாக அமைத்துக் கொண்டார் உ.வே.சா. இது அவருக்குத் தமிழ் அச்சுப்பதிப்பு உலகத்தில் இன்று மங்கா புகழைத் தந்திருக்கின்றது என்றால் அதில் தவறேதுமில்லை.

தொடரும்

சுபா

No comments:

Post a Comment