Sunday, January 31, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 86

பல்கலைக்கழகத்திலோ கல்லூரியிலோ படித்து பட்டம் பெற்று முதல் நாள் வேலைக்குச் செல்வது என்பது ஒரு சுவாரசியமான நிகழ்வு. நம் எல்லோர் வாழ்விலும் அந்த முதல் நாள் நிகழ்வின் ஏதாவது சில அங்கங்கள் மனதில் நிலைத்திருக்கத் தான் செய்யும். நம் உயர் அதிகாரிகளின்  நம்மைப் பற்றிய கவனிப்பு, ஏனைய ஊழியர்கள் நம்மோடு பழகும் விதம், பணியிடத்தில் நிகழ்ந்தவை என ஏதாகினும் சில சம்பவங்கள் பற்றிய நினைவு நம் மனதின் ஆழத்தில் இருக்கத்தான் செய்யும்.

என் சரித்திரத்தில் உ.வெ.சா வின் பதிவின் வழி 1880 வாக்கில் தமிழகத்தின் கல்லூரிகளில் இருந்த நடைமுறைகளை ஓரளவு அறிய முடிகின்றது.

16.2.1880 திங்கட்கிழமை முதன் முதலாக தந்து கும்பகோணம் காலேஜ் ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டுதன் பணியைத் தொடங்குகின்றார். முதல் நாள் தனது ஆடையலங்காரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் திருவாவடுதுறை ஆதினகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் தமக்கு பரிசாக அளித்த சட்டை ஒன்றை போட்டுக் கொண்டு, அதன் மேல் துப்பட்டா ஒன்றை போட்டுக் கொண்டு தன் தலையில் சால்வையைக் கட்டிக் கொண்டு வகுப்பிற்குச் சென்றிருக்கின்றார். அந்த தனது உடையலங்காரக் கோலத்தை நினைத்தால் தனக்கே சிரிப்பாக வருகின்றது என தனது முதுமை காலத்தில் குறிப்பிடுவதைக் காண நாம் நமது பணியிடத்தில் முதல் நாள் செய்த உடையலங்காரக் கோலங்களும் அதன் ஏற்பாடுகளும் நம் கண் முன்னே வராமலில்லை.

ஒரு நல்ல நேரம் பார்த்து அன்று பி.ஏ, எம்.ஏ வகுப்புக்களுக்குத் தமிழ்ப்பாடம் போதிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. முதலில் இவர் பாடம் போதிப்பதைக் கவனிக்க ஏனைய சில ஆசிரியப் பெருமக்களும் உடன் வந்திருக்கின்றார்கள். மடத்திலேயே இருந்து பவ்வியமாக இருந்து பழகிய உ.வெ.சாவிற்கு அவர்களோடு சரி சமமாக உட்காரக் கூட கூச்சமாக இருந்திருக்கின்றது. அவரை ஊக்கப்படுத்தி அமரச் செய்து பாடத்தைத் தொடங்கச் செய்தார் தியாகராசச் செட்டியார். வினாயகரையும் தனக்குத் தெரிந்த எல்லா கடவுள்களையும் வணங்கிக் கொண்டு நாலடியாரில் "இரவச்சம்" எனும் அதிகாரத்தை தொடங்கி இசையுடன் அதனை  பாடி மாணாக்கர்களுக்குப் பொருள் கூறி விளக்க, முதல் நாள் பணி இனிதே தொடங்கியது.

இதனை முடித்து பி.ஏ முதலாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு அன்று மதியம் ஒரு வகுப்பு எடுக்க வேண்டியதால் இராமாயணத்தில் அகலிகைப் படலத்தைப் பாடம் நடத்தத் தொடங்கியிருக்கின்றார். அங்கிருந்த ரங்காச்சாரியார் என்ற சமஸ்கிருதப் பண்டிதர் உ.வெ.சா சொன்ன ஒரு விளக்கத்தை எழுந்து ஆட்சேபித்து பேசத் தொடங்கி விட்டார். ஏற்கனவே நல்ல முறையில் உ.வெ.சாவை கும்பகோணம் காலேஜில் தனது இடத்தை நிரப்ப அமர்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் தியாகராசச் செட்டியாருக்கு இது வருத்தத்தைத் தந்திருக்க வேண்டும். ஆக, உடனே, "ஸ்வாமிகள் இந்த சமயம் ஒன்றும் திருவாய் மலர்ந்தருளக் கூடாது. உ.வெ.சா பாடத்தைச் சரியாக மாணவர்களுக்குப் போதிக்கின்றாரா என்று மட்டும் பார்த்தால் போதும். வயதில் இளையவர். அனுபவம் குறைந்தவர். ஆக, ஊக்கம் கெட்டு விடக்கூடாது". என்று அவரது எதிர்ப்பை தந்து விட்டு உ.வெ.சா பாடத்தைத் தொடர உதவியிருக்கின்றார்.

சிலர் இப்படித்தான் வாய்ப்பு கிடைத்தால் போதும்,  என தமது திறமைகளைப் பிறர் முன்னிலையில் காட்ட எது நேரம் என அறியாமல் சுயநலத்தோடு செயல்படுவர். பிறரை ஏதாவது ஒரு வகையில் குறைத்துப் பேசியோ, 'உன்னை விட எனக்கு அதிகம் தெரியும் பார்' என அதிமேதாவித்தனத்தைக் காட்டியோ செயல்படுவதன் வழி தங்கள் அறிவின் ஆழத்தைக் கண்டு ஏனையோர் அச்சப்படுவர், தம்மை மதிப்பர் என்று நினைப்பவர்களும் சிலருண்டு. இடம் பொருள் ஏவல் அறிந்து, எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரிந்த  ஒருவரே அறிவுடையோராக நிலைத்து நிற்க முடியும்.  தனக்குத் தெரியும் என்பதற்காக எல்லா இடத்திலும் தண்டோரா போட்டுக் கொண்டிருப்பதும் பல வேளைகளில் எதிர்மறை விளைவுகளையே உருவாக்கும்.

அன்றைய நாள் பாடங்கள் முடிந்ததும் சில மாணாக்கர்களிடம் தியாகராசச் செட்டியார் பேசி,  'பாடம் எப்படி இருந்தது? புரிந்ததா' என வினவ, மாணவர்களுக்கு திருப்தியாக பாடம் அமைந்தது எனத் தெரிந்து கொண்டார். இது அவருக்கு திருப்தியையும் அளவில்லா மகிழ்ச்சியையும் அளித்தது. இறுதியில் கல்லூரி முதல்வர் கோபால் ராவ் அவர்களும் வந்து இவரது பாடத்தை கவனித்து மாணாக்கர்களிடம் வினவ, மாணாக்கர்களின் திருப்தி அவருக்கும் உ.வெ.சாவின் பால் நம்பிக்கையை அளித்தது. முதல் நாள் அனைத்தும் நிறைவாக நடந்து முடிந்தது உ.வெ.சாவுக்கு உற்சாகத்தின் அளவை உயர்த்தியிருந்தது. இப்படி ஒரு வாரம் கழிந்து வார இறுதியில் இந்த மகிழ்ச்சியான அனுபவத்தை திருவாவடுதுறை திரும்பி தன் குடும்பத்தினரிடமும் தேசிகரிடமும் சொல்ல வேண்டும் என்ற ஆவல் உ.வெ.சா மனதில் வளர்ந்து பெரிய மரமாகிக் கொண்டிருந்தது.

அந்த வாரத்தில்,மடத்திலிருந்து யார் கும்பகோணம் சென்றாலும் காலேஜில் உ.வெ.சா எப்படி பாடம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்? அவரைப் பற்றிய நல்ல மதிப்பு ஏனையோருக்கு வந்துள்ளதா? என தேசிகர் அறியச் சொல்லி வினவிக் கொண்டிருந்தார். திருமணமாகி கணவன் வீடு சென்ற மகள் நல்ல முறையில் புகுந்த வீட்டில் பெயர் பெற்று மகிழ்ச்சியோடு இருக்கின்றாளா என ஒரு தாய் எதிர்பார்ப்பது போன்ற ஒரு நிலை தான் இது. தம்மிடமும்  மடத்தின் வித்வான், தன் இனிய தோழமை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடமும் பாடம் கற்ற மாணவர் உ.வெ.சா, தான் பணி செய்யும் இடத்தில் நல்ல பெயர் பெற்று மகிழ்ச்சியோடு இருக்கின்றாரா எனத் தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் அவருக்கும் இருந்தது.

வார இறுதில் தன்  குடும்பத்தினரைச் சென்று பார்த்து அவர்களிடம் எல்லா கதைகளையும் சொல்லிப் பேசியாகிவிட்டது. மடத்திற்குச் சென்று தேசிகரிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிக் கொண்டிருந்தது உ.வெ.சாவிற்கு. அன்றைய நிகழ்வை உ.வெ.சா இப்படி குறிப்பிடுகின்றார்.

"என் தாய் தந்தையர் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டனர். நான் பதில் சொன்னவாறே ஸ்நானத்தையும் போஜனத்தையும் முடித்துக் கொண்டேன். வேலையைப்பற்றி அவர்களுக்கு ஒருவாறு சொல்லிவிட்டு மடத்திற்கு விரைந்து சென்றேன். அப்பொழுது மிகுந்த முகமலர்ச்சியோடு சில அன்பர்களுடன் ஒடுக்கத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருந்தார். நான் போய்க் கண்டேன். 
இருவருக்கும் உண்டான ஆனந்தம் இப்படியென்று எடுத்துச் சொல்வது அரிது."

சில நிகழ்வுகளை  எழுத்தில் வடிக்கலாம். சில நிகழ்வுகளை உணரத்தான் முடியும். அப்படித்தான் இந்த நிகழ்வும்!

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment