Tuesday, July 15, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 68

நம் நினைவுகளின் சக்தியைக் கண்டு பலவேளைகளில் நான் வியப்பதுண்டு!

நம்மோடு வாழ்ந்து இல்லாது போனவர்களை நினைத்துப் பார்த்து அவர்களோடு இணைந்திருந்த தருணங்களையும் இணைந்து பெற்ற அனுபவங்களையும் உணரும் சாத்தியத்தை  நம் நினைவுகளைக் கொண்டு நம்மால் அடைய முடிகின்றது. நேரில் கண்டு பெறும் அனுபவம்.. ஆழ் உள்ளத்தில் பதிந்து போகும் போது அந்த நினைவுகளும் கூட... அவற்றை  நினைத்துப் பார்க்கும் போது..... உயிர் பெறுமோ?

நினைவுகள் கொடுக்கும் பலத்தில் இழந்தவர்களை மறந்து அடுத்த கட்ட நிகழ்வுகளைத் தேடிக் கொண்டேதான் நம் மனம் பயணிக்கின்றது. இல்லாது போன விஷயங்கள் நம் வேறினை பிடிங்கி வீசியது போல நம்மை தடுமாறச் செய்தாலும் கூட மீண்டும் சுதாகரித்துக் கொண்டு தான் மனிதர்கள் நாம் அடுத்த கணமே மீண்டும் வாழ முயற்சிக்கின்றோம்.  இது இயற்கையின் ஒரு கொடை என்று தான் நான் காண்கின்றேன்.

அத்தகைய ஆளுமை நிறைந்த திருவாவடுதுறை திருமடத்தில் புலவர்களும், தம்பிரான்களும், கல்விமாண்களும், பொருள் படைத்த செல்வந்தர்களும் புழங்கும் இடத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் நிழலில் வலம் வந்த உ.வே.சா,  அந்த நிழல் தந்த மரம் இல்லாத நிலையில் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றார். ஆதீனகர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் அன்பே உருவானவர். தாய் போன்று உ.வே.சாவைப் பராமரித்து பாதுகாத்து அன்பு செலுத்தி வந்த பிள்ளையவர்கள் மறைவுக்குப் பின் உ.வே.சாவை ஆதீனகர்த்தர் மடத்திலிருந்து நீக்கிவிடவில்லை. மாறாக தம்மோடு உடன் வைத்துக் கொண்டார். தம்மிடமே தொடர்ந்து பாடம் கேட்டு வரலாம் என்றும் கூறி உ.வே.சாவுக்குத் தமிழ்க்கல்வி மேல் இருந்த ஆர்வம் மேலும் தொடர புதிய வழியைக் காட்டினார் என்பது மிகையாகாது. மடத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்து பாடம் கேட்டு வரும் அதே வேளையில், திருமடத்தில் தொடர்ந்து ஏனைய இளைய மாணாக்கர்களுக்குப் பாடம் போதுக்கும் பணியையும் உ.வே.சாவுக்கு உருவாக்கிக் கொடுத்தார் தேசிகர். 

தக்க சமயத்தில் நம் வாழ்வில் நடைபெறும் சில விஷயங்கள் நம் வாழ்க்கை போகும் திசையை மாற்றக் கூடியவை. மாற்றங்கள் எப்போதுமே நன்மையைத் தான் செய்கின்றன. மாற்றத்தைக் கண்டு அஞ்சி அதனை எதிர்நோக்கத் தயங்காமல் அந்த மாற்றம் தரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்பவர்களே மேலும் மேலும் தன் சொந்த வாழ்க்கையில் வளர்ச்சிப் படியில் ஏறிச் செல்ல முடியும். 

பிள்ளையவர்கள் மறைவு திருமடத்தில் சூன்ய நிலையை சில காலங்கள் உருவாக்கி இருந்தது என்பது மறுக்க முடியாத ஒன்றே. ஆனால் காலம் செல்ல செல்ல இந்த நிகழ்வும் கூட, இவை நேரடி உணர்வுகள் என்ற நிலைக் கடந்து,  வரலாறாக ஆகிப் போகின்றன. ஏற்றுக் கொள்ள முடியாத வேதனையைப் பலருக்கும் கொடுத்திருந்தது பிள்ளையவர்களின் மறைவு. மடத்தின் சார்பில் குமாரசாமித் தம்பிரானும் பிள்ளையவர்களின் குமாரன் சிதம்பரம்பிள்ளையும், உ.வே.சாவும் தமிழகம் முழுதும் இருந்த தமிழறிஞர்களுக்கு இந்தத் துக்கச் செய்தியை விவரித்து கடிதங்களை மடத்தின் சார்பாக எழுது அனுப்பி வைத்தனர். இதற்கு பிள்ளையவர்கள் மேல் பாசமும் பரிவும் அன்பும் கொண்டிருந்த அன்பர்கள் பலர் தங்கள் துக்கத்தை விவரித்து கடிதங்கள் அனுப்பியிருக்கின்றனர். பலர் இரங்கற்பாடல்களும் எழுதியிருக்கின்றனர். இப்படி பலர் இரங்கற் பா பாடிய போதும் தனது அன்பிற்குறிய ஆசிரியரை இழந்து நின்ற உ.வே.சா, தாம் ஒரு பாடலும் எழுத வில்லை என்பதை என் சரிதத்தில் குறிப்பிடுகின்றார். 

"அன்பர்கள் பலர் தங்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துப் பதிற் கடிதங்கள் எழுதினர். மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலிய பலர் இரங்கற் பாடல்கள் எழுதினர். ஸ்ரீ மகா வைத்திய நாதையரும் அவர் தமையனாராகிய இராமசுவாமி ஐயரும் கடிதமும் பாடல்களும் எழுதினார்கள்.

இவ்வாறு பலர் சரமகவிகள் பாடியபோது நாமும் பாடவேண்டுமென்ற உணர்ச்சி எனக்கு உண்டாகவில்லை. அத்துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகளுக்குச் சக்தி ஏது? பாட்டுக்காகத் துக்கத்திற்கு ஓர் உருவம் கொடுக்க முயற்சி செய்யவில்லை"

உண்மையான அன்பைக் காட்ட வார்த்தைகளுக்கு முழு சக்தி ஏது? 
அன்பு, பிரிதலின் துயர்...இவை வார்த்தைகளின் விவரணைக்கு அப்பாற்பட்டவை. இவை வார்த்தைகளைக் கடந்ததது..! உணர்தலுக்கு மட்டுமே உரியது! 

தொடரும்...

சுபா

1 comment:

  1. உண்மையான அன்பைக் காட்ட வார்த்தைகளுக்கு முழு சக்தி ஏது?...அன்பு, பிரிதலின் துயர்...இவை வார்த்தைகளின் விவரணைக்கு அப்பாற்பட்டவை. இவை வார்த்தைகளைக் கடந்ததது..! உணர்தலுக்கு மட்டுமே உரியது!

    ~சொற்களாளேயே அவற்றின் எல்லையை உணர்த்தியதின் மகிமையை வேறு எப்படித் தான் உணர்த்த முடியும் ! நீங்கள் மூலநாலூடன் கலந்து உறவாடுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
    இன்னம்பூரான்

    ReplyDelete