Monday, May 19, 2014

Robert Langdon is back..! - 21

இந்த இழை தொடங்கி இன்றோடு சரியாக ஒரு வருடம் ஆகின்றது. இந்த நன்னாளிலேயே இதனை முடித்து வைப்பது உசிதம் என நினைக்கின்றேன். :-)

இன்ஃபெர்னோ வெளிவந்த பிறகு இந்த நாவலை வாசித்த பலர் இத்தாலியின் ஃப்ளொரன்ஸ், வெனிஸ் நகரங்களில் ரோபர்ட்டும் சியென்னாவும் பயணிக்கும் வழிகளிலெல்லாம் பயணம் செய்து பார்த்து வர விருப்பம் கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கின்றனர். சில தன்னார்வலர்கள் இவ்வகை முயற்சிகளில் ஈடுபடுவது ஒரு புறமிருக்க சுற்றுலா பயண ஏற்பாட்டு நிறுவனங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சுற்றுலா திட்டங்களை வகுத்து விரும்புவோருக்காக வழங்குவது என்ற முயற்சியைத் தொடங்கியிருக்கின்றது. இதன் வழி ஃப்ளோரன்ஸ் நகருக்கு, அதாவது பொதுவாகவே இத்தாலிக்குச் சுற்றுப் பயணிகள்   வருகையும் அதனால் வரும் இலாபமும் அதிகரித்திருக்கின்றது என்பது கடந்த ஓராண்டில் நாம் காணும் நிகழ்வு.  நேரில் சென்று காண வாய்ப்பில்லாதவர்களும் இவ்விடங்களைப் பார்க்கும் வாய்ப்பு பெற வேண்டும் என செயல்படும் சில தன்னார்வலர்களும் இருக்கின்றார்கள். இந்த இடங்களையெல்லாம் விர்ச்சுவல் டுவரிஸம் என்ற கருத்தின் வழி செயல்படுத்தி இதனை சாத்தியமாக்குகின்றனர் சிலர். உதாரணமாக இந்த வலைப்பகுதியைக் காணலாம்!http://www.visitflorence.com/itineraries-in-florence/places-inferno-in-florence.html

கடந்த ஆண்டின் பெஸ்ட் செல்லர் என்பது ஒரு புறமிருக்க, இன்ஃபெர்னோ மீதான குறைபாடுகளை முன் வைக்கும் முயற்சிகளும் இருக்கவே செய்கின்றன.  இவ்வகைக் குற்றச்சாட்டுக்கள் பொதுவாக இந்த நூலில் வரலாற்று சான்றுகளில் தென்படும் சில பிழைகள், தவறான மேற்கோள்களாக உள்ளன  எனக் குறிப்பிடுவதோடு சில முக்கியக் கருத்துக்களை ப்ரவுன் எளிமைப் படுத்தி கொடுத்து விட்டார் என்பதுவுமாகிய நோக்கில் இவர்கள் முன் வைக்கின்றனர்.

உதாரணமாக இந்த வலைப்பக்கத்தில் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. http://www.thedailybeast.com/articles/2013/05/20/fact-checking-dan-brown-s-inferno-10-mistakes-false-statements-over-simplifications.html.

இதில் சொல்லப்படும் சில விஷயங்கள் மறுக்கப்படமுடியாதவையே. உதாரணமாக ப்ரவுன், The David  என குறிப்பிட்டு மைக்கல் ஏஞ்சலோவின் சிற்பத்தை குறிப்பிடும் போது இது மட்டுமே David  சிற்பம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதாக அமைவது ஒரு பெறும் பிழை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய குற்றச்சாட்டே. David  சிலையைப் பல சிற்பக் கலைஞர்கள் உருவாக்கியிருக்கின்றனர். அதிலும் புகழ்வாய்ந்த சிற்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான David சிற்பங்கள் ஃப்ளோரன்ஸ் நகரிலேயே கூட உளளன. அப்படி இருக்கையில் மைக்கல் ஏஞ்சலோவின் சிற்பத்தை மட்டும் குறிப்பிட்டு The David  எனக் கூறுவது வரலாற்றுச் சான்றுகளை எளிமைப் படுத்தும் ஒரு விஷயமாகவே கருதும் வகையில் உள்ளது. 

இதே போலவே, 13ம் நுற்றாண்டு நிகழ்வான Black Death .. அதன் பின்னர் ஏற்பட்ட சீரிய ரெனைஸான்ஸ் கலாச்சார மாற்றம் என்பவை இதற்கு முன்னர் ஏற்பட்ட இவ்வகை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய Black Death பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை என்பதுவும் ஒரு குற்றச்சாட்டாக உள்ளது. இது ஒரு பெருங்குற்றமாக எனக்கு தெரியவில்லை. காரணம், ப்ரவுன் தனது நாவலில் 13ம் நூற்றாண்டு நிகழ்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க நினைத்து முழுமையாக அந்தப் பார்வையிலேயே தன் நாவலை நகர்த்திச் சென்றிருக்கின்றார். வரலாற்று பின்னனி கொண்டதாக கதையம்சம் இருந்தாலும் ஸ்கூல் டெக்ஸ்ட் புத்தகம் போல  நூல் செய்ய வேண்டும் என்ற அத்தியாவசியம் அவருக்கு இருக்கவில்லை என்றே தோன்றுகின்றது. அடுத்து வரும் ஒரு குற்றச்சாட்டு... symbology என்று டான் ப்ரவுன் பயன்படுத்திய ஒரு துறைசார் பணி தவறான பயன்பாடு என்றும் iconography என்பதே இத்துறைக்குப் பொருந்தும் ஒரு சொல் என்றும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றது. ஆனால் ஆக்ஸ்ஃபர்ட்  டிக்‌ஷனரியை நோக்கும் போது symbology  எனும் சொல்லிற்கு The study or use of symbols என்பது விளக்கமாக வழங்கப்படுகின்றது. ஆக இதனை ஒரு பெரிய குற்றச்சாட்டாக காண்பதை விட இச்சொல் பயன்பாட்டில் இணைக்கப்பட்டு விட்டது என்று ஏற்றுக் கொள்வது காலத்திற்கேற்ற தேவை என எண்ணத் தோன்றுகின்றது.

குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் மற்றொரு வாசகர் இங்கேhttp://harvardpolitics.com/books-arts/dan-browns-inferno-more-heaven-than-hell/ தனது கருத்துக்களை விரிவாகப் பதிந்திருக்கின்றார். அதில் அவர் குறிப்பிடும் ஒரு குற்றச்சாட்டு, இந்த நாவல் மிக அதிகமான வகையில் சாலைகள், கட்டிடங்களின் தகவல்கள், மூலைகள், பகுதிகள் என தகவல்களைக் கொட்டியிருக்கின்றார் என்பதாக உள்ளது. என் பார்வையிலோ.. இது ஒரு கூடுதல் விளக்கம் தரும் விவரிப்பாகவே வாசிக்கும் போது நான் கருதினேன். நேரில் செல்லும் போது இவற்றையெல்லாம் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு சென்று பார்த்து வரவேண்டும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை.ஆக இதனையும் ஒரு குறறச்சாட்டாக என்னால் கருத முடியவில்லை. 

கூகளில் தேடினால் ஒரு சிலரது இத்தகைய முயற்சிகள் பற்றிய விபரங்கள் பத்திரிக்கை விமர்சனங்களாகவும் தனியார் வலைப்பக்கப் பதிவுகளாகவும் ப்ளோக் பதிவுகளாகவும் வந்திருப்பதைக் காணலாம். இத்தகைய பார்வைகளும் அத்தியாவசியமானவையே!

இன்ஃபெர்னோ போன்ற ஒரு நூலை வாசிப்பவர் இப்படி வெவ்வேறு கோணங்களில் அதில் வழங்கப்பட்டிருக்கும் தகவல்களில் உள்ள வரலாற்றுச் சான்றுகளின் உண்மை நிலையை அறிந்து கொள்ள முயற்சி செய்வது ஆரோக்கியமான ஒன்றே. சரித்திர நாவல்கள் எழுதுவோருக்கு உள்ள ஒரு மிகப் பெரிய பிரச்சனை, வரலாற்று விஷயங்களில் பிழையில்லாதவாறு நாவலை உருவாக்கும் அதே சமயம் கதாபாத்திரங்களின் சுவாரஸியத் தன்மைக் கெடாதவாறு அதனைப் பார்த்துக் கொள்வது என்பதும் பெரிய சேலஞ்ச் ஆகவே இருக்கின்றது.

தனது எல்லா நாவல்களில் ப்ரவுன் கடைபிடிக்கும் ஒரு செயல்....
கதையின் நாயகி கதாநாயகனின் அறிவுத் திறன், அறிவு செயல்பாடு ஆகிய எந்த விஷயத்திலும் தாழ்ந்தவராகவோ சார்ந்தவராகவோ இல்லாத, சுய நம்பிக்கையுடைய, கல்வி கற்ற,  ஆய்வு நோக்கம் உடைய, தனித்தன்மை பொருந்திய ஒரு பெண் கதாபாத்திரம். இதே வகையில்  இன்ஃபெர்னோவிலும் ப்ரவுன் கதையின் நாயகிக்கு வடிவம் தந்திருக்கின்றார். இது தனிப்பட்ட வகையில் எனக்கு மனதிற்கு வாசிக்கும் போதே உற்சாகமளிப்பதாக இருந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.


நூலைத் தொடங்கும் முன் இவர் குறிப்பிடும் டாண்டேயின் ஒரு வாசகம் என் மனதிற்கும் நியாயமான ஒரு வாசகமாகத் தோன்றியது. 

இந்த இழையை நிறைவு செய்வதற்கும் இந்த வாசகம் பொருந்தும் எனக் கருதி இந்தப் பதிவை நிறைவு செய்கின்றேன்.

The darkest places in hell are reserved for those who maintain their neutrality in times of moral crisis!
                                                                                                                                    -Dante Aligieri

என்னுடன் இந்த இழையில் பயணம் செய்த அனைவரையும் மீண்டும் என் மனதில் பிரமிப்பூட்டி சிந்தனையை தூண்டும் மற்றொரு நூலை வாசிக்க வாய்ப்பு ஏற்படும் வேளையில் புதிய இழையின் வழியாகச் சந்திக்கின்றேன்.

-சுபா

No comments:

Post a Comment