Tuesday, August 27, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 56

திருப்பெருந்துறை புராணத்தை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதி அதனை திருப்பெருந்துறையிலேயே அறங்கேற்றம் செய்த அந்த நாட்கள் பிள்ளையவர்கள் வாழ்க்கையில் பகலும் இருளும் போலமைந்தவை. ஒரு நாள் சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒரு நிகழ்வு நடந்தால் மறு நாள் ஏதாகினும் ஒரு பிரச்சனையோ வருத்தம் ஏற்படுத்தும் நிகழ்வோ ஏற்பட்டு விடும். அந்த மாறி மாறி வருகின்ற சூழலிலும் செய்யுள் தொடர்ந்து இயற்றி சுப்பிரமணியத்தம்பிரானுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் பிள்ளையவர்கள். அக்கால கட்டத்தே நடந்த நிகழ்வுகள் விரிவாக என் சரித்திரம் நூலில் இல்லையென்றாலும் கூட ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் பாகம் 2ல் இவை விரிவாகச் சொல்லப்படுகின்றன.  இப்பகுதிகளை வாசிக்கும் போது ஏதோ நூல் தானே என நினைத்து வாசித்துச் செல்ல முடியவில்லை. அவரது அக்காலத்து சோகங்களும், கஷ்டங்களும் படிக்கின்ற வாசகர்களைத் தாக்கிச் செல்வதை மறுக்க முடியவில்லை.


மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் திருவாவடுதுறை மடத்தில் இணைந்த சமயத்தில் மடத்தின் ஆதீனகர்த்தராக இருந்தவர் ஸ்ரீ அம்பலவாண தேசிகர். இவரைப் பற்றி பிள்ளையவர்கள் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் என்ற நூல் ஒன்றினை இயற்றி இருந்தமை பற்றி முன்னர் கூறியிருந்தேன். இந்த நூலும் நமது த.ம.அ மின்னூல்கள் சேகரத்தில் இடம்பெறும் ஒன்று. அந்த நூலையும் அது பற்றிய விவரங்களையும்  இங்கே காணலாம்.  http://tamilheritagefoundation.blogspot.com.es/2013/07/thf-announcement-ebooks-update.html.

இந்த நூலை பிள்ளையவர்கள் இயற்றி தேசிகர் முன்னிலையில் அறங்கேற்றிய வேளையில் அவருக்குத்  திருவாவடுதுறை மடத்திலிருந்து ஏறுமுகத்தில் அமைந்த தங்கத்தினாலான உருத்திராட்ஷ கண்டி ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. இந்தக் கண்டிதான் எப்போதெல்லாம் பொருளாதாரப் பிரச்சனைகள் பிள்ளைவர்கள் வாழ்க்கையில்  குறிக்குடுமோ அப்போதெல்லாம் பணச் சிரமம் போக்கி காத்து வந்திருக்கின்றது. பணத்திற்கு தட்டுப்பாடு வரும் போதெல்லாம் இந்த கண்டி அடமாணம் வைக்கப்படுமாம்.  ஏதாகினும் ஒரு நூல் இயற்றி பொருள் ஈட்டியபின் வட்டியும் முதலுமாகக் கொடுத்து இந்தக் கண்டியைப்  பிள்ளையவர்கள் மீட்டுக் கொள்வாராம்.

திருப்பெருந்துறைப் புராண அறங்கேற்றத்திற்குச் செல்லும் ஆசிரியர் அவ்வேளையில் அடமானம் வைக்கப்பட்டிருந்த இந்தக் கண்டியை தரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என மாணவர்கள் விரும்பியிருக்கின்றனர். மாணவர் விருப்பத்தை நிறைவேற்ற ஆசிரியருக்கும் ஆசை தான்; ஆனால் பணம் இல்லையென்ற நிலை. தமக்குத் தெரிந்தவரான் சோழன்மாளிகை இரத்தினம்பிள்ளையென்பாரிடம் உ.வே.சா வை அனுப்பி விவரத்தைத் தெரிவித்து கடன் கேட்டு அப்பணத்தை வட்டியுடன் தாம் சமர்ப்பித்து விடுவதாக வாக்குறுதி அளித்து பணம் வாங்கி வந்து பின்னர் அந்த கண்டியைப் பெற்று மாணவர் மனம் குளிர அதனை அணிந்து கொண்டு திருப்பெருந்துறைக்குச் சென்றிருக்கின்றார் பிள்ளையவர்கள்.

இவருக்குப் பணம் கொடுத்து உதவிய அந்த நல்ல மனம் படைத்த இரத்தினம் பிள்ளை என்பவர் `இத்தொகையைப் பிள்ளையவர்கள் திருப்பித் தரவேண்டியதில்லை. நெடுநாட்களாக  ஏதாவது ஒரு வகையில் பிள்ளையவர்களைக் கௌரவிக்க வேண்டும்` என்ற எண்ணம் இருந்தமையைத் தெரிவித்து இச்சமயத்தில் உதவ முடிந்ததில் பெரு மகிழ்ச்சியே என பிள்ளையவர்களுக்குத் தெரிவிக்குமாறு உ.வே.சாவிடம் சொல்லியனுப்பியிருக்கின்றார். அந்த நல்லுள்ளம் படைத்தவரின் அன்பில் மகிழ்ந்து பிள்ளையவர்கள் அவருக்காக ஒரு செய்யுள் இயற்றினாராம். இது பிள்ளையவர்கள் சரித்திரத்தில் பக்கம் 192ல் காணப்படுகின்றது.

ஒரு நூல் அரங்கேற்றத்திற்கு முன் நூலின் எல்லா பாடல்களையும் எழுதி முடித்து விட்டுத்தான் அறங்கேற்றத்திற்குச் செல்லவேண்டும் என்ற நிலை முன்பு இருக்கவில்லை என்றே தெரிகின்றது. நூல் ஓரளவு தயாரானதும் நூல் அறங்கேற்றம் காண உள்ள ஊரிலேயே தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் பாடல் இயற்றி அதனைத் தொடர்ந்து அறங்கேற்றம் செய்து வருவது வழக்கமாக இருந்திருக்கின்றது அக்காலத்தில். அந்த நிலையில் தான் திருப்பெருந்துறை புராண அறங்கேற்றமும் நடைபெற்றிருக்கின்றது.

1873ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரிடம் சென்று நூல் அறங்கேற்றத்திற்குச் செல்லும் முன் ஆசிபெற்றுக் கொண்டு திருப்பெருந்துறை  புறப்பட்டிருக்கின்றார் பிள்ளையவர்கள். அப்பயணத்தின் போது பிள்ளையவர்களுடன் உ.வே.சா, பழனிக்குமாரத்தம்பிரான், அரித்துவாரமங்கலம் சோமசுந்தரதேசிகர், சுப்பையாபண்டாரம், கும்பகோணம் பெரியண்ண பிள்ளை, சவேரிநாதப்பிள்ளை, தில்லை விடங்கன் வேலுசாமி பிள்ளை ஆகியோரும் உடன் சென்றிருக்கின்றனர் என்பன போன்ற விவரங்களை உ.வே.சாவின் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது.


தொடரும்..

சுபா

No comments:

Post a Comment