Sunday, December 16, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 36



சங்கீத நாட்டமும் அதனையே தொழிலாகவும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த உ.வே.சாவுக்கு சங்கீதத்தில் தேவையான அளவு முறையான பயிற்சி இருந்தமை குறித்து இத்தொடரின் என்னுடைய முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். சங்கீதத்தை விட தமிழ்க்கல்வியே அவர் மனதை முழுதுமாக ஆக்ரமித்தது என்பதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.  தமிழ்க் கல்வி மேல் தீவிரப் பற்று இருந்தாலும் கற்ற இசை மனதை விட்டு அகலுமா?

பிள்ளையவர்களிடம் மாணாக்கராகச் சேர்ந்த ஓருரிரு நாட்களிலேயே உ.வே.சாவுக்கு நந்தனார் சரித்திரம் எழுதிய கோபால கிருஷ்ண பாரதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. முதல் சந்திப்பில் அவருக்குக் கோபால கிருஷ்ண பாரதியின் மேல் இல்லாமலிருந்த மதிப்பு நாளடைவில் மாற்றம்  காண்பதையும்  என் சரித்திரம் நூலில் 29ம் அத்தியாயத்தில் காண்கின்றோம்.  கோபால கிருஷ்ண பாரதியை முதன் முதலில் சந்திக்கும் நிகழ்வை உ.வே.சா  இப்படிப் பதிகின்றார்.

" அப்போது வீதி வழியே ஒரு கிழவர் கையில் மூங்கில் கழி ஒன்றை ஊன்றிக்கொண்டு சென்றார். ...
...“என்ன செய்து கொண்டிருக்கிறான்? சங்கீதம் அப்பியாசம் செய்து வருகிறானா?”

“செய்து வருகிறான். தமிழ் படித்தும் வருகிறான். இங்கே மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் படிக்கச் செய்யலாமென்று வந்திருக்கிறேன்.”

“அப்படியா? சந்தோஷம். மீனாட்சி சுந்தரம் பிள்ளை நல்ல வித்துவான். நல்ல குணசாலி, உபகாரி, சிறந்த கவி. ஆனால் அவர் சங்கீத விரோதி. சங்கீத வித்துவானென்றால் அவருக்குப் பிரியமிருப்பதில்லை.”

இந்த விஷயத்தைப் பாரதியார் சொன்னபோது நான் அதை நம்பவில்லை. பாரதியாருடைய அழகற்ற உருவத்தைப் பார்த்து நான் வியப்படைந்தேன். அவருடைய கோணலான உடம்புக்கும் அவருடைய புகழுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அன்றுதான் உணர்ந்தேன். “நந்தனார் சரித்திரத்தை இவரா இயற்றினார்?” என்றுகூட நான் நினைத்தேன். அச்சரித்திரத்தில் இருந்த மதிப்பு அவரைப் பார்த்தபோது அவர்பால் உண்டாகவில்லை. கவர்ச்சியே இல்லாத அவரது தோற்றமும் அவர் கூறிய வார்த்தையும் என் மனத்தில் திருப்தியை உண்டாக்கவில்லை. ஆயினும் என் தகப்பனார் அவரிடம் காட்டிய மரியாதையைக் கண்டு நானும் பணிவாக இருந்தேன்."

கனம் கிருஷ்னையர் பால் அதீத மதிப்பும் அன்பும் கொண்டவர் கோபாலகிருஷ்ண பாரதி. வேங்கட சுப்பையர் அவரது மாணாவராக இருந்தமையினால் கோபாலகிருஷ்ண பாரதிக்கு இவர்கள் குடும்பத்தார் மீதும் அன்பு நிறைந்திருந்தது. ஒருவாராகப் பேசி உ.வே.சா அவர்கள் கோபாலகிருஷ்ண பாரதியிடம் தினமும் சங்கீதப் பயிற்சியையும் மேற்கொள்வதென்பது முடிவாக, தினம் தினம் விடியற்காலையிலும் மாலையிலும் சங்கீத அப்பியாசம் செய்து வரலானார் உ.வே.சா. இந்த ஏற்பாடு பற்றி உ.வே.சா மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்குத் தெரிவிக்க வில்லை. தாம் தமிழ் படிக்க வந்து முற்றும் முழுதும் அதிலேயே கவனம் வைக்காமல் இசையையும் படித்து வருகின்றோம் என்று தெரிந்தால் ஆசிரியர் தம் மேல் கோபம் கொள்வாரோ என்ற அச்சம்  தான் அதற்குக் காரணம். அதோடு கோபால கிருஷ்ண பாரதியார் வேறு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சங்கீத விரோதி என்று  கூறி இருந்தமையால் கூடுதல் அச்சம். அதனால் இந்த விஷயத்தை உ.வே.சா மனதிற்குள் மறைத்தே வைத்திருந்தார்,  தானாக இந்த விஷயம் ஒரு முறை வெளிவரும் வரையில்.

உ.வே.சா  தருகின்ற குறிப்புக்களிலிருந்து கோபாலகிருஷ்ண பாரதியைப் பற்றியும் ஓரளவு நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

கோபாலகிருஷ்ண பாரதி வேடிக்கையாகப் பேசி ரசிக்கும் வகையில் கதைகள் சொல்வாராம். ஏதாகினும் ஒரு சொல்லைக் குறிப்பிட்டால் போதும். உடனே அதற்கு ஒரு புராணக் கதையைக் கூறுவாராம். பேச்சினூடேயே அடிக்கடி பழமொழிகளைச் சொல்வாராம். அவரது சாரீரம் கம்மலாக இருந்தமையால் சில வருஷங்களாகப் பிடில் வாத்தியத்தைப் பயின்று  தான் தனிமையில் இருக்கும் வேளைகளில் அதை வாசித்து பொழுது போக்குவாராம். தினமும் காலையிலும் மாலையிலும் மாயூரநாதர்கோயிலிலுள்ள அகஸ்தீசுவர ஸ்வாமி சந்நிதியில் நீண்ட நேரம் யோகம் செய்து கொண்டிருப்பாராம். பாரதியாருடன் பழகப் பழக அவர் ஒரு மகான் என்பதை தான் உணர்ந்தமையை உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

அவரிடம் சங்கீதப் பயிற்சி மேற்கொண்ட பின்னர் பல புதிய கீர்த்தனைகளை உ.வே.சா கற்றுக் கொண்டிருக்கின்றார். நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளுக்கான மெட்டையும் ராகத்தையும் தாளத்தையும் அவரே சொல்லிக் கற்றுத்தந்திருக்கின்றார்.

நந்தனார் சரித்திரம் நூலை தமிழ் இணையப் பல்கலைக்கழக இணைய நூலகத்தில் இங்கே வாசிக்கலாம். http://www.tamilvu.org/library/l5J50/html/l5J50001.htm


தொடரும்...
அன்புடன்
சுபா

No comments:

Post a Comment