Saturday, October 13, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 26


தான் யார் யாரிடம் பாடம் கற்றோம் என்ற விபரங்களையெல்லாம் உ.வே.சா சொல்லி விவரிக்க அவரிடம் நைடதத்திலிருந்து அவருக்குத் தெரிந்த ஒரு பாடலைக் கூறி விளக்கச் சொல்கின்றார் பிள்ளையவர்கள். இந்த மகாவித்துவான் முன்னிலையில் நடுங்கிக் கொண்டே கூறும் உ.வே.சா அவர்களை உற்சாகமும் தைரியமும் படுத்தி மீண்டும் ஒரு செய்யுளைக் கூறச் செய்து கேட்கின்றார் பிள்ளையவர்கள். மாணவர் தகுதியாணவர்தாம் என்ற நம்பிக்கை மனதில் ஏற்பட்டிருக்கும் போல. நிகண்டை மனனம் செய்வது உ.வே.சாவுக்கு பயனளிக்கும் என்று ஆலோசனையும் கூறுகின்றார்.

பிறகு இவரை மாணவராக ஏற்றுக் கொள்ள முடியுமா என்று உ.வே.சாவின் தந்தையார் வினவும் போது சிறிது தயக்கம் காட்டுகின்ரார். சில மாணவர்கள் முதலில் மிகுந்த ஆர்வத்துடன் வருவதும் பின்னர் சில நாட்கள் சென்று வருவதாகக் கூறிச் சென்று விடுவதும் மீண்டும் வந்து பாடங்களைத் தொடராமல் போவதுமாக தனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களை வித்துவான் மீனாட்ட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள்~ கூறுகின்றார்கள். இது உ.வே.சாவிற்குத் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டாரோ என்ற மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அந்த நிமிடத்து தனது மனப்போக்கினையும் நிகழ்வையும் என் சரித்திரம் நூலில் இப்படிப் பதிகின்றார் உ.வே.சா.

"அவர் பேச்சிலே அன்பும் மென்மையும் இருந்தன. ஆனால் அவர் கருத்து இன்னதென்று தெளிவாக விளங்கவில்லை. என் உள்ளத்திலே அப்பேச்சு மிகுந்த சந்தேகத்தை உண்டாக்கி விட்டது. அவர் தம்மிடம் வந்து சில காலம் இருந்து பிரிந்து போன மாணாக்கர்கள் சிலர் வரலாற்றையும் சொன்னார். “இந்த விஷயங்களையெல்லாம் சொல்வதன் கருத்து என்ன? நம்மை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லை என் பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார்களோ? அப்படியிருந்தால் இவ்வளவு பிரியமாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டார்களே” என்று நான் மயங்கினேன்.

என் தந்தையார் தைரியத்தை இழவாமல், “இவன் அவ்வாறெல்லாம்  இருக்க மாட்டான். இவனுக்குப் படிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை. தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தங்களுடைய உத்தரவு இல்லாமல் இவன் எங்கும் செல்லமாட்டான். இதை நான்
உறுதியாகச் சொல்லுகிறேன், இதற்கு முன் இவனுக்குப் பாடம் சொன்னவர்களெல்லாம் இவனைத் தங்களிடமே கொண்டு வந்து சேர்க்கும்படி வற்புறுத்தினார்கள். பல காலமாக யோசித்து அதிக ஆவலுடன் தங்களிடம் அடைக்கலம் புக இவன் வந்திருக்கிறான். இவனுடைய ஏக்கத்தைக் கண்டு நான் தாமதம் செய்யாமல் இங்கே அழைத்து வந்தேன். தங்களிடம் ஒப்பித்து விட்டேன். இனிமேல் இவன் விஷயத்தில் எனக்கு யாதோர் உரிமையும் இல்லை” என்று கூறினார். அப்படிக் கூறும்போது அவர் உணர்ச்சி மேலே பேசவொட்டாமல் தொண்டையை அடைத்தது. நானும் ஏதேதோ அப்போது
சொன்னேன்; வேண்டிக் கொண்டேன்; என் வாய் குழறியது; கண் கலங்கியது; முகம் ஒளியிழந்தது."

இதனை வாசித்த போது என் மனதில் இப்படியொரு தந்தை அமைய உ.வே.சா பெரும் தவப்பயன் செய்திருக்கின்றார் என்றே உடன் தோன்றியது. இந்த நிகழ்வு மாத்திரமல்ல. அவரது சிறு பிராயத்திலிருந்து இறுதி வரை பற்பல சூழல்களில் உ.வே.சாவின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கின்றார் வெங்கடசுப்பையர். உ.வே.சாவின் தெளிந்த சிந்தனை அவரது வாழ்க்கைப் பாதையை அமைத்தது என்றால் அந்தப் பாதையை அமைக்க உறுதுணையாக இருந்தது வெங்கடசுப்பையரின் அர்ப்பணிப்பு என்பதில் சந்தேகமில்லை.

இவர்களின் தீவிரத்தைப் பார்த்த பிள்ளையவர்களின் முகத்திலே மலர்ச்சி. இப்படி ஒரு மாணவர் நிச்சயமாக கவனம் சிதறாமல் தமிழ்க்கல்வியில் நிறைந்த ஈடுபாட்டுடன் நிச்சயம் நல்ல நிலையை அடைவார் என்ற நம்பிக்கை மனதில் வந்திருக்க வேண்டும். அவரை மாணவராக ஏற்றுக் கொள்ளச் சம்மதம் தெரிவித்து தங்குவதற்கும் உணவிற்கும் எப்படி ஏற்பாடு என்று வினவுகின்றார்.

உ.வே.சாவின் தந்தையார் பிள்ளையவர்களையே இவரை முழுதுமாக கவனித்துக் கொள்ள வேண்டிக் கேட்க திருவாவடுதுறையிலும் பட்டீச்சுரத்திலும் இருக்கும் காலத்தில் முழுதுமாக உ.வே.சாவைப் பராமரித்துக் கொள்வதாக உறுதியளிக்கின்றார் பிள்ளையவர்கள். ஏனைய காலங்களில் அவர் சொந்தங்களின் துணையில் உணவுக்கு ஏற்பாடு செய்து கொள்வது ஏற்புடையதாக இருக்கும் என்று கூறி தனது நிலையை விளக்குகின்றார் பிள்ளையவர்கள். பின்னர்,

"பிள்ளையவர்கள்: “சரி. ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடம் கேட்க ஆரம்பிக்கலாம்.” 

என் தவம் பலித்ததென்று நான் குதூகலித்தேன். அஸ்தமன சமயமாகி விட்டமையால் நாங்கள் மறு நாட்காலையில் வருவதாக விடை பெற்றுக் கொண்டு எங்கள் விடுதிக்கு மீண்டோம்."

உ.வே.சாவின் விளக்கக் குறிப்புக்களின் வழியாக மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை அறிந்து கொள்கின்றேன். அவரைப் பற்றிய பரவலான தகவல்கள் கிடைப்பது அறிதாகவே இருக்கின்றது.  என் சரித்திரம் மட்டுமன்றி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு பாகம் 1ல் இவரைப் பற்றி ஆழமான பல விவரங்களை நான் அறிந்து வருகின்றேன். அதனை இங்கு தேவைப்படும் பதிவுகளில் பகிர்ந்து கொள்வதும் நலம் பயக்கும் என்று நான் கருதுவதால் அவற்றை அவ்வப்போது குறிப்பிடவும் நினைத்திருக்கின்றேன்.

மாணாக்கர்களிடம் பிள்ளையவர்கள் எவ்விதம் அன்பு காட்டுவார் என்பதை  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு பாகம் 1ல் உ.வே.சா ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"பலரிடத்தும் சென்று சென்று அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து பலமுறை அலைந்து ஒவ்வொரு நூலையும் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டு வந்தவராதலின் யாதொரு வருத்தமுமின்றி மாணாக்கர்களைப் பாதுகாத்து அவரகளை அலைக்கழிக்காமல் அவர்களுக்கு வேண்டியவற்றை உடனுடன் கற்பித்துவர வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்து வந்தது. அதனால், பாடங்கேட்கவரும் செல்வர்களுக்கும் ஏனையோருக்கும் விரும்பிய நூல்களைத் தடையின்றிப் பாடஞ்சொல்லி ஆதரிக்கும் இயல்பு  அக்காலந்தொடங்கி இவருக்கு முன்னிலையிலும் அதிகமாக ஏற்பட்டது. சில ஏழைப் பிள்ளைகளுக்கு ஆகாராதிகளுக்கும் உதவி செய்து வருவாராயினர். தம் நலத்தைச் சிறிதும் கருதாமல் மாணாக்கர்களுடைய நன்மையையே பெரிதாகக் கருதும் இயல்பு இப்புலவர் பெருமானிடத்து நாளடைவில் வளர்ச்சியுற்று வந்தது. பக். 106-107."

இதனை வாசித்து என் மனம் நெகிழ்ந்தது.  இப்படி ஒரு புலவர் பெருமானைப் பற்றி அறிந்து கொள்ளும் போது நமக்கு வழியாட்டியாகவும் அமையத்தக்கவர் இவர் என்றே என் மனம் உணர்த்துகின்றது.


தொடரும்..

சுபா

No comments:

Post a Comment