Friday, March 23, 2001

பிரம்மோபநிஷத்து (பாகம் 3) - மனித, இயந்திர - மந்திராயணம் (மந்திர உலகம்)


Date: Fri, 23 Mar 2001 06:00:32 -0800 (PST)
From: "suba k."
Subject: Upanishad - Brahmopanishad (Part 3)
To: meykandar@egroups.com

சுருக்கம்:
- ஆத்மாவைக் கீழ் அரணியாகவும் ப்ரணவ மந்திரமாகிய ஓம்காரத்தை மேல் அரணியாகவும் செய்து கொண்டு தியானமாகிய கடைதலை அப்பியாசம் செய்து மறைந்திருந்த அக்னியை வெளிக் காண்பது போல பரமாத்மாவைக் காண வேண்டும்.

- ஆத்மாவைக் காண்பதற்கு தொடர்ச்சியான சத்தியமும் தவ வாழ்வும் தேவை.

- சிலந்தி எவ்வாறு நூலை உண்டாக்கி மீண்டும் தனக்குள்஧ளை இழுத்துக் கொள்கின்றதோ அதே போல ஆத்மா விழிப்பிலும் உறக்கத்திலும் வெளி உலகத்திற்கு வருகின்றது, மறுபடி திரும்பி உள்ளே போகிறது.

- மனமும் வாக்கும் எட்டிப் பிடிக்க முடியாமல் திரும்பி விடுகின்ற ஒரு நிலையே ஜீவனுடைய பரிபூர்ண ஆனந்த நிலை. புத்திமான் இதனை உணர்ந்து முக்தனாகின்றான்.

- எங்கும் வியாபித்திருக்கும் ஆத்மாவை ஞானத்தாலும் தவத்தின் மூலமாகவும் அறிய வேண்டும். அதுவே பிரம்மோபநிஷத்தால் அடைய வேண்டிய பதவி. அதுதான் பிரம்மோபநிஷத்தால் அடைய வேண்டிய பதம் எனப்பூர்த்தி. 

தொடர் சிந்தனை

இந்த மூன்றாம் பாகத்தோடு பிரம்மோபநிஷம் முடிவடைகின்றது. இந்த இறுதிப் பாகத்தில் வருகின்ற விளக்கமானது மிகுந்த ஆழமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது. அத்தோடு சைவ சித்தாந்தத்திற்கும் பிற ஏனைய கிளை சமயங்களாகிய யோகம் போன்றவற்றிற்கும் உபநிஷத்துகளுக்கும் உள்ள கருத்துத் தொடர்பினையும் காட்டுவதாகவும் விளங்குகின்றது.

முழுமையாக பார்க்க முற்படுகையில் பிரம்மோபநிஷம், பரப்பிரம்மமாகிய இறையைக் கண்டு, அனுபவித்து, அடைவதையே ஆத்மாவின் குறிக்கோளாகக் காட்டுகின்றது. ஆத்மா ஒரு ஜடப்பொருளாக இல்லாமல், செயல்படுகின்ற, பிறவற்றை செயல்படுத்துகின்ற ஒன்றாகவே காட்டப்படுகின்றது. ஆத்மா உடலுக்குள் இருந்து அதனை தனது போக்கில் இயக்கும் வல்லமை கொண்டது. ஆத்மா நினைக்கும் வகையில் தான் உடலின் செயல்பாடுகள் அமைகின்றன. ஆத்மா நாட்டம் இழந்து சோர்வுற்று இருக்கையில் உடல் சோர்வடைவதும், ஆத்மா மிகுந்த பலத்தோடும் வேட்கையோடும் இருக்கையில் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதையும் நமது சொந்த அனுபவித்தில் நாம் உனர்ந்திருப்போம்.

ஆத்மா இறைவனை அடைவது என்பது சாதாரண காரியம் அன்று என்றும் அதனை அடையும் வழிமுறைகளை பற்றிய விளக்கத்தினையும் 2ம் பாகத்தில் பார்த்தோம். ஆக அதன் தொடர்ச்சியாகவே இந்த கட்டுரை அமைகின்றது.

ஜீவன் ஒரு உடம்பினை எடுக்கும் போது அது தன்னோடு சேர்த்து வைத்துள்ள பாவ புன்னியங்களின் அடிப்படையிலேயே தனக்கான ஒரு உடம்பினையும், வாழ்க்கையினையும், அது வாழ்கின்ற சூழலையும் பெருகின்றது. 'ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம்' எனும் மூன்று கன்மங்களும் ஆன்மாவின் செயல்பாடுகளுக்கேற்ற வகையில் இதனை அமைத்துத் தருகின்றன. எந்த ஒரு மனிதனும் தனது இருப்பை (existance), அதன் காரணத்தை, இறைவனின் மேல் மட்டும் திணித்து விட முடியாது. உலகில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களையும் பார்க்கின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலும் மாறுபட்ட குணாதிசியங்களோடு விளங்குகின்றார்கள். உருவத்திலும் குணத்திலும், திறமையிலும், வாழ்வின் போக்கினை அமைப்பதிலும் வித்தியாசமற்ற இருவரைக் காண்பது இயலாது.

ஆக, ஒவ்வொருவரையும் ஒரு தனிப்பட்ட ஜீவனாகக் காட்டுவது, மறையாக இருந்து கொண்டு அந்த ஜீவனை வடிவமைக்கின்ற, தொழிற்படுத்துகின்ற அந்த ஜீவனுக்குறிய கன்மமே! ஆத்மா தான் செய்த பாவ புன்னியங்களுக்கேற்ப ஒரு பிறவியினை, வாழ்கின்ற சூழலை பெற்று மேலும் தனது 'தேடலை', எடுத்திருக்கின்ற இந்தப் பிறவியிலும் தொடர்கின்ற வகையிலேயே இந்த பிறப்பு அமைகின்றது.

ஆத்மா பரப்பிரம்மத்தை தன்னுள்ளே ஐக்கியப்படுத்தி, அதனோடு தான் இரண்டறக் கலக்கின்ற போதே தொடர்ச்சியான வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி கிடைக்கின்றது. அந்த நிலையை அடைகின்ற வறையில் பல பல காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு எதிலெல்லாம் மனம் செல்கின்றதோ அதனை எல்லாம் தேடி அனுபவித்து கற்றுக்கொண்டு பின்னர் அதனை விட மேலானவற்றைத் தேடும் பனியில் ஈடுபடும் சுபாவத்தோடு ஜீவன் விளங்குகின்றது. உடலுக்கு கருவிகளாக ஐம்புலன்கள் இருக்கின்றன. ஆன்மாவுக்கு கருவிகள் எவை?

ஒரு உடல் ஜீவன் இல்லாமல் இயங்க முடியாது. ஜீவன் உடலைவிட்டு வெளியேறிவிடுகின்ற நிலையில் அது தனக்குள்ளே இருக்கின்ற எந்த கருவிகளையும் செயல்படுத்தக்கூடிய திறனை முற்றாக இழந்து பிணமாகி விடுகின்றது. ஆக இரண்டு வகையில் ஜீவன் தனது செயல்களை நடைமுறைப்படுத்துகின்றது. தூலப்பொருளான உடம்பினையும் அதன் கருவிகளையும் செயல்படுத்துவது; சூக்குமப்பொருளான மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகியவற்றினைத் தொழிற்படுத்துவது. ஒன்று கண்ணுக்குத் தெரிகின்ற கை, கால், வாய், காது, இருதயம், நரம்புகள் போன்ற பாகங்கள்; மற்றொன்று கண் பார்வைக்குப் புலப்படாத எண்ணங்கள், சிந்தனைகள், ஆசைகள், ஆன்ம திறன் போன்றவை.

மனிதனின் இயக்கத்தை மேலோட்டமாகப் பார்க்கின்ற போது வெளிப்படையாகத் தோன்றுகின்ற குணங்களை வைத்துத்தான் நாம் ஒருவரை எடைபோடுகின்றோம். ஒருவரோடு நாம் பழக வேண்டுமானால் முதலில் நமக்கு அவரைப்பற்றிய ஒரு பிம்பம்(image) தேவைப்படுகின்றது. உதாரணமாக, 'அவள் மிகவும் திறமையானவள்; நன்றாகப் பேசும் திறன் உள்ளவள்; தனது அலுவலகத்தில் நல்ல பொறுப்பாக இருப்பவள்; நண்பர்களோடு அன்பாக இருப்பவள்; எதிலும் வேகமாக முடிவெடுப்பவள்' என ஒரு பெண்ணைப் பார்த்து அவளோடு பழகிய சில நிமிடங்களில் நமது மூளை உடனே பதிந்து கொள்கின்றது.[இந்த பதிவு என்பது தூலப்பொருளான மூளையில் பதியப்பட்டாலும், அதன் தாக்கங்கள் ஆன்மாவிலும் பதியப்படுகின்றன.] இந்த கனிப்பின் அடிப்படையிலேயே நாம் அந்த பெண்ணைப் பார்க்கின்ற, நினைக்கின்ற ஒவ்வொரு முறையும் நமக்கு அவளைப்பற்றிய ஒரு காட்சி கிடைக்கின்றது. அதனைப் பொறுத்தே நமது அவளைப்பற்றிய சிந்தனை வெளிப்பாடுகளும் அமைகின்றன.

இந்த image என்பது வெறும் வெளித்தோற்றத்தின் அடைப்படையில் மாத்திரம் அமைந்த ஒன்றல்ல. தூல உடம்பின் கருவிளோடு சூக்கும உடம்பின் கருவிகளும் இணைந்து செயல்பட்டு இந்த முடிவினை, ஒரு விளக்கத்தினை ஒரு மனிதருக்குத் தருகின்றது. தூல உடம்பினது செயல்பாடுகள் சூக்கும கருவிகளின் செயல்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாதவை. இரண்டும் இணைந்தே செயல்படுபவை; ஒவ்வொரு காரியத்தின் செயல்முறைகளும் அதன் முடிவுகளும், அதனால் அந்த ஆன்மா கற்றுக்கொண்ட பாடங்களும் மூளையில் பதியப்படுகின்றன. அந்த பாடங்களின் அடிப்படையிலேயே ஆன்மா தன்னை திருத்திக்கொள்கின்றது; வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்ல முயற்சிக்கின்றது; மேலும் தனது திறமைகளை வளர்த்துக் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதரும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதே சமயத்தில், தனக்கென்று அமைந்திருக்கின்ற, பிற மனிதர் யாருக்கும் தெரியாத மற்றொரு சுக்கும உலகத்திலும் வாழ்கின்றார். இதுவே மந்திர உலகம். இந்த உலகில் ஒரு மனிதர் தன்னோடு உரையாடிக்கொள்ள முடியும்; தன்னையே ஒரு சோதனைப்பொருளாக எடுத்துக் கொண்டு தனது நடவடிக்கைகளை அலசிப்பார்க்க முடியும். இதனை நாம் எல்லோரும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். சாதாரண மனிதர் தன்னை மட்டுமே அலசிப்பார்க்கும் சக்தியைக் கொண்டவர்; ஒரு ஞானியோ தன்னை உணரும் அதே தருணத்தில் பிறறது மந்திர உலகத்தில் புகுந்து, அவரது எண்ணங்களையும், கன்மங்களையும் அதனால் விளையக்கூடிய பலாபலன்களையும் அறிந்தவராகின்றார். ஒரு ஞானி என்பவர் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டு நிற்பவர். பரப்பிரம்மத்தை தன்னுள்ளே அதிகமாக ஐக்கியப்படுத்திக் கொண்டு மனித குணாதிசியங்களாகிய ஆசை, பொறாமை, காமம், விருப்பு, வெறுப்பு போன்றவற்றிலிருந்து தன்னை விலக்கி வைத்து இறைவனோடு வாழ்பவர். பரப்பிரம்மம் வாழ்கின்ற இல்லமாக தனது உடம்பினை வைத்திருப்பவருக்கு பரப்பிரும்மத்தின் சக்திகள் படிப்படியாக அமைந்து மற்ற பிற உயிர்களுக்கு உதவும் வகையிலேயே எடுத்திருக்கின்ற இப்பிறவியும் இருக்கின்ற வாழ்க்கையும் அமைந்து விடுகின்றது. நமது பாரம்பரியத்தில் இந்த உதாரணங்களுக்கு பஞ்சமே இல்லை.

இந்த தெய்வீக சக்தியானது நன்மையைக் கொடுக்கின்ற அதே வேளையில், ஒரு சிலர் இந்த சித்திகளை அனுபவிக்கின்ற ஆரம்ப நிலையிலேயே எல்லாம் தெரிந்த ஞானிகளாக தன்னை நினைத்துக் கொண்டு இந்த மந்திர உலகத்தின் பெருமைகளைக் கண்டு அனுபவித்தவுடன் உடனே தன்னை இறைவனின் பிரதிநிதி என்று நினைத்துக் கொண்டு அகங்காரத்தோடு இந்த சக்திகளை தீயவழிகளில் பயன்படுத்தி தனக்கே துன்பத்தை வரவழைத்துக் கொண்ட செய்திகளையும் நாம் கேட்டிருக்கின்றோம். இம்மாதிரியானோர் தனக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு சில சக்திகளிக்குள்ளேயே (சித்திகள்) அடங்கிவிடுகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தச் செயலினால் அந்த அத்மா மேலும் கன்மத்தை ஈட்டுவதோடு, முழுமையான ஆன்ம விடுதலை பெறுவதிலிருந்து தாமதிக்கின்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றது.

பரப்பிரம்மத்தை ஆத்மாவோடு பதியவைத்து ஐக்கியப்படுத்த தியானம் தேவையாகின்றது. தியானம் மந்திர உலகத்தில் ஆன்மாவை சஞ்சரிக்க வைப்பது. இந்த மந்திர உலகம் அக்கர சக்கரங்களால் ஆனது. இந்த மந்திர உலகத்தில் பயனிப்பதற்கு இந்த உடல் தேவையற்றதாக இருப்பினும் அந்த உலகத்தினுள் செல்வதற்கு வாயிலாக அமைவது இந்த உடலே. உடலில் இருக்கின்ற சக்கரங்களை முடுக்கி அக்னியை எழுப்பிட ஆன்மா மந்திர உலகத்தினுள் புகுகின்றது. [இந்த அக்னி மண்டலம் மூலாதாரத்திற்கு இரண்டு விரளளவு மேலே, பிருதிவியும் அப்பும் (மண் தத்துவமும் நீர் தத்துவமும்) சேர்ந்த இடத்தில் முக்கோணமாய் நான்கு இதழ் தாமரை வடிவத்தில் இருப்பது.] இந்த மந்திர உலகம் முற்றிலும் மந்திரங்களால் ஆனது. ஓம்காரமே அவற்றிற்கு மூலமாகின்றது. ஓம்காரம் பிரிந்து பிரிந்து பல பல மந்திரங்களாக உருவெடுக்கின்றது. அந்த ஓம்காரத்தினுள்ளே புகுந்து அதுவே தானாகி ஆன்மா தியானிக்க வேண்டும். அப்பொழுது பரப்பிரும்மத்தை உணரமுடியும்; காணமுடியும்; அதோடு கலந்து இன்புற்றிருக்க முடியும். சிவவாக்கியர் ஓம்காரத்தையும் அக்கர சக்கரங்களையும் விளக்குகின்ற தனது ஒரு பாடலில் இப்படிச் சொல்கின்றார். "ஓரெழுத்து உலகெல்லாம் உதித்தஅட் சரத்துள்ளே ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேதெ அறிகிலீர் மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே"

கனினி மென்பொருட்களின் சூக்கும இயக்கத்திற்கு எவ்வாறு binary விளங்குகின்றதோ அதே போல ஆன்ம இயக்கத்தின் மூல ஒலியாக ஓம்காரம் இருக்கின்றது. கண்களுக்கு புலப்படுகின்ற ஒரு மென்பொருளை கனினியில் பொருத்தி இயக்கும் போது அதன் செயல்திறனை அறிந்து கொண் பின்னரே ஒருவர் பயன்படுத்துகின்றார். ஆனால் பெரும்பாலும் எவ்வாறு அது செயல்படுகின்றது? எத்தனை module இணைந்து இந்த மென்பொருள் இயங்குகின்றது? அவை எவ்வாறு இணைக்கப்பட்டிருக்கின்றன? அது எவ்வாறு தனது GUI வர்ணங்களை வெளிப்படுத்துகின்றது? எழுத்துக்களை அச்சுவடிவத்தில் தருகின்றது? என்றெல்லாம் நாம் மறந்துவிட்டு (சிந்தனையிலிருந்து ஒதுக்கிவிட்டு) ஓமென்பொருள் வேலை செய்கின்றதா இல்லையா ? அது பழசாகி விட்டால் அதனை upgrade செய்யவேண்டும், அதனை எப்படி செய்வது?ஓ என இப்படித்தான் வெளிப்படையான பிரச்சனைகளில் பெரும்பாலும் மூழ்கி இயங்குகின்றோம். இதே போலத்தான் மனிதரைப்பற்றி நினைக்கின்ற போதும் நிகழ்கின்றது. 'நமது செயல்களுக்குக் காரணம் என்ன? எது என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது? எவ்வாறு நான் என்னை upgrade செய்து கொள்வேன்' என்று சிந்திப்பது குறைவே. அவ்வாறு தனது செயல்களுக்குக் காரணத்தைத் தேடி தன்னை மேம்படுத்திக் கொள்ள இந்த உடம்பும் நற்கருவியாக விளங்குகின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. உடம்பைக் கோயிலாகக் கொண்ட பாரம்பரியம் நமது. ஓம்காரத்தை ஒலித்து, அதற்குள்ளே ஆன்மாவை கொண்டு சென்று மந்திர உலகத்திற்குள் செல்லும் போது ஆன்மா தனது சக்திகளைப் பெறுக்கிக் கொள்கின்றது; பக்குவத்தில் உயர்கின்றது.

இந்த மந்திர உலகத்தின் கோட்பாடுகள், உலக வாழ்க்கையிலேயே தன்னை முற்றிலும் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட்ட பலருக்கும் உண்மையற்ற ஒன்றாகவே தென்படும். மந்திர உலகத்தின் இருப்பையும் அதன் உண்மைகளையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக மனிதர்கள் வாழ்கின்ற இந்த உலகமும் அதனுள் நாம் மாட்டிக்கொண்டு அனுபவிக்கின்றவைகளுமே வாழ்க்கையாகவும் இருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் Warnor Bros தயாரித்து வெளியிட்ட MATRIX படம் பார்த்தவர்கள் இந்த இரண்டு வகை உலகங்களைப் பற்றிய கோட்பாடுகளை இப்படம் மாறுபட்ட கோணத்தில் அலசிப்பார்ப்பதை மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக, எந்த உலகம் உண்மை; எதை நோக்கி நமது தேடல் இருக்கின்றது என்பதை அலசுவது என்பது இந்தப் படத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதை தேர்ந்தெடுப்பது என்னும் கேள்விக்கு விடை (அதாவது கன்மத்தை வடிவமைப்பது) மனிதனிடம் வழங்கப்பட்டுள்ள ஒரு சுதந்திரம். மனிதரே தனது வாழ்க்கையை நிர்ணயிக்க முடியும் என்பன போன்றவற்றை இந்த ஆங்கிலப் படம் மிகவும் சுவாரசியமான வகையில் காட்டியிருந்தது.

ஜீவன் இயற்கையிலேயே சுதந்திரத் தன்மையைக்கொண்டது. அந்த சுதந்திரத்தை ஆத்மா நல்வெழியில் செல்ல தேர்ந்தெடுக்கும் போது ஆன்மா தனது பக்குவத்தில் உயர்ந்து முக்தனாகின்றது. இதனை விளக்குவதாகவே பிரம்மோபநிஷத்து அமைந்துள்ளது.

இத்தோடு பிரம்மோபனிஷத்துக்கான விளக்கம் முடிவடைகின்றது. அடுத்த கட்டுரையில் கைவல்யோபனிஷத்துக்கான எனது சிந்தனை தொடரும்.

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment