Saturday, September 17, 2011

இத்தாலியன் பாஸ்டா - பறங்கிக்காய் டாக்லியடெல்ல

இன்று என் சமையலறையிலிருந்து மேலும் ஒரு பாஸ்டா சமையல் குறிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சுடச் சுட சூடான சமையல் குறிப்பு. சற்று முன்னர் தான் தயாரித்து அலங்கரித்து மேசையில் வைத்துச் சாப்பிட்டு ருசித்து விட்டு சமையல் குறிப்பை பகிர்ந்து கொள்கின்றேன்.

பறங்கிக்காய் டாக்லியடெல்ல (Tagliatelle)

தேவையான பொருட்கள்

- பாஸ்டா டாக்லியடெல்ல வகை (இது சுருளாக இருக்கும்) http://en.wikipedia.org/wiki/Tagliatelle இப்பக்கம் சென்றால் இந்த வகை நூடல் பற்றி விளக்கமாக விக்கியில் அறிந்து கொள்ளலாம்.
- பறங்கிக்காய் (ஹொக்கைடோ) - பாதி
- வெங்காயம் - 1 பெரியது
- கருப்பு ஆலீவ் கொட்டைகள் - 10
- பெஸ்டோ விழுது (இது காய்ந்த தக்காளி, மிளகாய் சேர்த்து அறைத்து ஆலிவ் எண்ணெயில் கலந்தது)
- ஆலிவ் எண்ணை - 1 சிறிய கரண்டி
- அவாகாடோ - 1 முழுதும்
- இத்தாலியன் துளசி
- ரோஸ்மேரி இலைகள்
- உப்பு - தேவையான அளவு
- கருப்பு மிளகுப் பொடி - தேவையான அளவு


படத்தில் டாக்லியடெல்ல பாஸ்டாவையும் ஹொக்கைடோ வகை பறங்கிக்காயையும் காணலாம்.

செய்முறை

1.ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து பின்னர் 2 கரண்டி உப்பு சேர்த்து அதில் டாக்லியடெல்ல பாஸ்டாவை போட்டு கொதிக்க வைக்கவும். பாஸ்டா மெண்மையாக ஆகும் வரை.

2. ஒரு நோன்ஸ்டிக்கர் பேன் எடுத்து அதில் 1 கரண்டி ஆலிவ் எண்ணெ விட்டு சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

3. பின்னர் அதில் சிறு துண்டுகளாக வெட்டிய பறங்கிக்காயைச் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து மெதுவான சூட்டில் வேகவைக்கவும்.

4.இப்போது 3 கரண்டி பெஸ்டோவைப் பறங்கிக்காயுடன் சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும்.

5. பாஸ்டா மெண்மையாக வெந்தவுடன் அதில் உள்ள நீரை வடித்து விட்டு தனியாக வைக்கவும்.

6.இப்போது பாஸ்டாவை பறங்கிக்காய் கலவையுடன் சேர்த்துக் கிளறவும்.

7.ரோஸ்மேரி இலைகளை காம்பிலிருந்து பிரித்து பாஸ்டாவில் கலந்து மேலும் கிளறவும். இப்போது ஆலிவ் கொட்டைகளைச் சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறி வைக்கவும்.

8.உப்பு சரிபார்த்து போதவில்லையென்றால் கொஞ்சம் சேர்க்கலாம். இப்போது மிளகுத் தூளை கொஞ்சமாகச் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.

9.அவகாடோ பழத்தின் தோலை நீக்கி விட்டு சிறிதாக விரும்பும் வண்ணம் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

இப்போது பாஸ்டா தயாராகி விட்டது. இதனை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து வைத்தால் சுவையை நிச்சயம் கூட்டும். ஆக தட்டில் பாஸ்டாவை வைத்து அதில் வெட்டிய அவகாடோ பழத்தின் கீற்றுகளை வைத்து விரும்பும் வகையில் அலங்கரித்து மேசையில் வைத்து பரிமாறி சாப்பிட்டு மகிழவும்.


அன்புடன்
சுபா

கூத்தனார் அப்பன் - திருவண்ணாமலை

கூத்தனார் அப்பன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மோட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் கூத்தனார் அப்பன் சிலை உள்ளது.


கூத்தனார் அப்பன் சிலை

கோயில் இல்லாது ஒரு சிலை மட்டும் மிக வித்தியாசமான வடிவத்தில் வட்டமான ஒரு மேல் பகுதி கைகள் போன்ற இரண்டு பக்கத்திலும் பின்னர் கீழ்பகுதி என அமைந்துள்ளது இச்சிலை. சிலை ஏறக்குறைய 10 அடி உயரம் கொண்டது. இச்சிலையின் மேல் ஆங்காங்கே மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து பக்கத்தில் மணிகட்டி ஆலய வழிபாட்டு பொருட்களையும் வைத்து எளிமையான முறையில் கோயில் வழிபாட்டினை செய்து வருகின்றனர் இவ்வூர் மக்கள்.

இவ்வூர் மக்களுடன் பேசி அவர்களை இச்சிலை பற்றி விசாரித்த போது பல செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.

இம்மக்கள் இச்சிலையை கூத்தாண்டவர் சாமி என அழைக்கின்றனர். வருடத்திற்கு ஒரு முறை ஆடிமாதத்தில் இங்கே சிறப்பாக திருவிழா எடுத்து விஷேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர். முப்பூசை எனப்படும் ஆடு, பன்றி, கோழி ஆகியவற்றை பலி கொடுத்து அதனை சமைத்து படையல் செய்து இந்தச் சிலைக்கு வழிபாடு செய்கின்றனர்.

அபிஷேகத்திற்கு வீட்டிற்கு ஒன்றாக குடங்களில் நீர் எடுத்து வரப்படுகின்றது. இந்த நீரைக் கொண்டு இச்சிலையை அபிஷேகம் செய்து பின்னர் எண்ணெய் சீயக்காய் தேய்த்து சுத்தம் செய்து அலங்கரிக்கின்றனர். அபிஷேகம் செய்யும் போது 108 குடங்களை வரிசப்படுத்தி ஏணி வைத்து மேலே ஏறி அபிஷேகம் செய்கின்றனர்.

எண்ணெய் சீயக்காய் கொண்டு சுத்தம் செய்த பின்னர் இச்சிலையை முழுதாக மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைத்து அலங்கரிக்கின்றனர்

இந்தக் கிராம மக்களை மேலும் விசாரித்த போது இச்சிலையின் மேல் பகுதியை சிலர் வெட்டி எடுத்து வேறு இடத்திற்குக் கொண்டு சென்று இன்றும் வழிபாட்டிற்கு வைத்திருக்கின்றனர் என்ற செய்தியும் கிடைத்தது.

இது தாய் தெய்வத்தின் வடிவம் என்றும், பறவை கல் என்றும் கூட சொல்லப்படுகிறது. இந்த சிலையின் தலை பகுதி விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தான் இந்திய முழுக்க உள்ள அரவாணிகள் ஆண்டுதோறும் ஒன்று கூடி கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தங்களுக்குள் பிடித்த ஒருவரை தேர்ந்தெடுத்து முறைப்படி எல்லா சடங்குகளையும் செய்து திருமணம் செய்து கொள்ளும் அரவாணிகள் இறுதி தினத்தில் கணவர்கள் இறந்து விட்டதாக தாலிகளை அறுத்து எறியும் சடங்கும் இதில் அடங்கும்.

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தொல்லியல் ஆய்வுக்காக வந்த ஆய்வாளர்கள் காடுகள் நிறைந்த இப்பகுதியில் ஆய்வுகள் நடத்தி இங்கு கிடைத்த சில பொருட்களை ஆய்வுக்காகவும் பாதுகாப்பதற்கும் எடுத்துச் சென்றுள்ளனர். ஆய்வுப் பணிகள் முடிந்து அவர்கள் சென்ற பிறகு இந்தச் சிலை அங்கேயே இருந்ததால் ஊர் மக்கள் அதனை வழிபடும் இறைவனாகப் பாவித்து இன்று வரை வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்தச் சிலைக்கு முன் புறத்தில் உள்ள பெரிய நிலத்தில் ஆங்காங்கே சிறிய மேடுகளைக் காண முடிகின்றது. இவை என்னவாக இருக்கும் என விவரம் கேட்டபோது இங்கு வாழ்கின்ற இம்மக்கள் அதற்கான விளக்கம் அளித்தனர். முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர்களோ சிற்றரசர்களோ ஏதாவது ஒரு காரணத்திற்காக இப்பகுதியை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது தங்களுக்கு உடனடித் தேவைக்கு மட்டும் கொஞ்சம் பொருட்களை எடுத்துக் கொண்டு ஏனையவற்றை இவ்வகையான ஆழமான குழிகளைத் தோண்டி அவற்றிற்குள் பொருட்களைப் பத்திரமாக புதைத்து வைத்து விட்டுச் சென்று விடுவார்களாம். மீண்டும் தாங்கள் திரும்பி வரும் போது பொருட்களை எடுத்துக் கொள்வார்களாம். காடாக இருந்த இப்பகுதி எதிரிகளிடமிருந்து உடமைப் பொருட்களைப் பாதுகாப்பதற்கும் இவ்வகையில் உதவி இருக்கின்றது.

மேடுகள்

இந்திய தொல்லியல் ஆய்வாளர்களின் முயற்சியினால் இந்த இடம் கண்டெடுக்கப்பட்டு இச்சிலை பொதுமக்களுக்குத் தெரிய வந்த பின்னரும் கூட இப்பகுதி முழுமையாக ஆய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்படாத நிலை இருப்பது தெரிகின்றது. கடந்த கால தொல்லியல் ஆய்வுகளின் போது இப்பகுதில் இவ்வகையில் காணப்படும் இச்சிறு மேடுகளை ஆய்வாளர்கள் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்த போது வழிபாட்டுப் பொருட்கள் சில கிடைத்தன என்று இம்மக்கள் சொல்வதிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. இப்பகுதி ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டியுள்ளதால் மாவட்ட ஆட்சியாளர் பொது மக்கள் இம்மேடுகளை தோண்டக்கூடாது என தெரிவித்து கட்டளையிட்டிருக்கின்றனர். அதோடு பொது மக்களுக்கும் இவற்றை ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு செய்தால் அது கடவுள் குற்றம் என நினைத்து நோய் ஏற்படுவதாக நினைப்பதால் இவற்றை ஏதும் செய்யாமல் ஆங்காங்கே செடிகளை நட்டு பாதுகாத்து வருகின்றனர். மக்களின் இவ்வகை நம்பிக்கையே இப்பகுதியில் மறைந்து கிடக்கின்ற ஏராளமான வரலாற்றுச் சான்றுகளை இன்னமும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டு உணர முடிகின்றது.

படங்கள், விழியம்(வீடியோ) பதிவுகளைக் காண இங்கே செல்க!

அன்புடன்
சுபா

Saturday, July 16, 2011

தேன் உண்ணும் வண்டு

இயற்கை விரும்பிகளே,

நீங்கள் பார்த்து ரசிக்க என் தோட்டத்து மலர் மட்டுமன்றி இங்கு வந்து செல்லும் வண்டையும் படம் பிடித்து இங்கே இணைத்திருக்கின்றேன். உங்கள் ரசனைக்காக..!



தேன் அருந்துவதற்காக இந்த வண்டு செய்யும் ப்ரயத்தனத்தைப் பாருங்களேன்..!




இப்ப்படங்களுக்கு மின் தமிழ் நண்பர்கள் வழங்கிய கவிதைகள்..

பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்
-சூளாமணி:449
இன்னம்பூரான்
16 07 2011

மலரில் தேடும் வண்டே!
நீ தேடுவது தேனையென்பார்.
இல்லை இல்லை
ராஜத்தை யென்பேன் யான்.
-மோகனரங்கன்


வண்டே தேனைத் தேடுவது உன் இயல்பு
பண்டே சிந்தை புகுவது உன் தவிப்பு
சண்டே என்றாலும் சலிக்காமல் பறப்பு
உண்டே களைத்தாலும் சுற்றிவரும் ஈர்ப்பு!
-பவளசங்கரி


என் இனிய வண்டே ...

கவி செய்த மாயமென்னைக்
காற்றில் தாங்கிவந்து
மலைக்காட்சி மடியில் வைத்துக்
கலிக்கொல்லை காணச்செய்து
"ஜெட்-லாகில்" போட்டிருக்கு...

இணைய அன்பு ஈர்க்கிறது
கண்ணசத்தல் பறிக்கிறது
தாள் குவியல் தடுக்கிறது
வருவேன் ஒருநாள் இந்த
மாளிகையின் வாசலுக்கே.
அன்புக்கும் நட்புக்கும் மிக்க நன்றி!
--ராஜம்

Sunday, July 10, 2011

Tränendes Herz

ஞாயிற்றுக் கிழமை ஸ்பெஷல்.. இதோ.


இதுவும் ஒரு வசந்த கால மலர்ச்செடி வகை.

இந்தப் பூச்செடியின் பெயர் டோய்ச் மொழியில் Tränendes Herz. கண்ணீருடன் உள்ள இதயம் என்று மொழி பெயர்க்கலாம். இச்செடி வகையின் பூர்வீகம் சீனா என செடிகளுக்கான ப்ரத்தியேகமான விக்கி குறிப்பிடுகின்றது.

நீர் சொட்டுவது போலவும் இதயம் போன்ற அமைப்பிலும் இப்பூ உள்ளதைப் பாருங்கள்.


சரமாக இளம் சிவப்பில் இருதயம் போன்ற வடிவில் மலர்கள் இருக்கும். இந்தச் செடி குளிர் காலம் முடிந்ததும் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் மண்ணுக்குள்ளிருந்து முளைத்து வரும். மே மாதம் பூக்கத்தொடங்கி இம்மலர்கள் ஜூன் ஜூலை மாத ஆரம்பம் வரை பூத்துக் கொண்டிருக்கும். ஒரு சரம் ஏறக்குறைய இரண்டு மாதங்களும் அப்படியே காய்ந்து விழாமல் இருக்கும்.


இந்தச் செடி ஜூலை மாத ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மலர்களை உதிர்த்து பின்னர் பழுப்பு நிற இலைகளுக்கு மாறும். ஜூலை மாதக் கடைசியில் முழுதும் வாடி விழுந்து விடும் பின்னர் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை இந்தச் செடி இருப்பதே தெரியாது. வசந்த கால பூ வகைகளில் இது வித்தியாசமான வடிவில் அமைந்த ஒன்று.

என்னிடம் உள்ள இந்தச் செடி கடந்த 5 ஆண்டுகளாக இருக்கின்றது. மீண்டும் வந்து மலர்ந்து இனிமை சேர்த்து மறைந்து கொள்ளும் செடி இது.

விக்கிபீடியாவில் http://en.wikipedia.org/wiki/Lamprocapnos_spectabilis பகுதியில் மேலும் இத்தாவர வகை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அன்புடன்
சுபா

Sunday, July 3, 2011

ஜம்போ மிளகாய் பாஸ்டா

இன்று ஜம்போ மிளகாய் பயன்படுத்தி இத்தாலிய உணவான பாஸ்டா தயாரித்தேன். ஜம்போ மிளகாய் கொஞ்சம் காரம் தான். ஆனால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பச்சை மிளகாய் காரத்தை விட சற்று குறைவான காரம்.

இந்த வகை பாஸ்டா தயாரிக்க உங்களுக்கு 30 நிமிடங்கள் போதும்.

2 பேருக்கு தயாரிக்கும் அளவு:

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பாஸ்டா - 2 பேருக்கு சமைக்க 350 கி பாஸ்டா. இதில் குறிப்பாக மக்கரொனி, ஸ்பெகட்டி போன்று இல்லாமல் சிறிதாக இருக்கும் எந்த வகை பாஸ்டாவையும் இந்த ரெஸிப்பிக்கு பயன்படுத்தலாம்.

இந்தப் படத்தை பாருங்கள்.

இதில் உள்ள சிறிய வகைகள் பல தமிழகத்திலும் கிடைக்கின்றன. குறிப்பாக பென்ன, ஸ்பிராலி வகைகள் பயன்படுத்தலாம். நான் இன்று பயன்படுத்தியது பென்ன வகை பாஸ்டா.

மற்ற தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 (பெரியது)
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
ப்ரொகோலி - 50கிராம்.
குடை மிளகாய் - (சிவப்பு, மஞ்சள், பச்சை - மூன்றையும் பயன்படுத்தலாம்)
கேரட் - 1
ஆலிவ் எண்ணெய்
பெஸ்டோ - அரைத்த விழுது (4 கரண்டி) (இது சூப்பர் மார்க்கெட்டில் இத்தாலிய உணவு வகை பகுதியில் கிடைக்கும். இது அடிப்படையில் இத்தாலிய துளசி + மல்லி + பூண்டு அறைத்து ஆலிவ் எண்ணெயில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் விழுது)
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 2 கரண்டி

காய்கறிகளை உங்களுக்கு பிடித்த வகையில் வெட்டிக் கொள்ளுங்கள்.

என் தோட்டத்தில் காய்த்த மிளகாய் இன்றைய சமையலில்..! ஜம்போ மிளகாய் பக்கத்தில் டொஸ்கானா மிளகாய்.

ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் விட்டு அது கொதித்ததும் அதில் உப்பு 2 சிறிய கரண்டி சேர்த்து ஆலிவ் எண்ணெய் ஒரு கரண்டி சேர்த்து 350 கி பாஸ்டாவையும் அதில் போட்டு கொதிக்க விடுங்கள். 10 நிமிடங்கள் நன்கு வெந்து மெண்மையானதும் நீரை வடிகட்டி விடுங்கள்.

பாஸ்டா வெந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே ஒரு நோன்-ஸ்டிக் பேனில் ஆலிவ் எண்ணெய் விட்டு அதிகம் சூடாகும் முன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் வதக்கிய பின்னர் குடை மிளகாய், காரட்களை சேர்த்து வதக்கவும். இப்போது பெஸ்டோ விழுதை சேர்த்து கொஞ்சம் உப்பும் சேர்த்து கிளறவும். 2 நிமிடங்களுக்குப் பின்னர் ப்ரோக்கோலி சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் ப்ரோக்கோலி வதங்கியதும் அதில் இப்போது வடித்து வைத்திருக்கும் பாஸ்டாவை சேர்த்து கிளரவும். உப்பு மேலும் தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்.

காரம் மேலும் தேவையென்றால் கொஞ்சம் கருப்பு மிளகு தூளாக்கி சேர்க்கவும்.

5 நிமிடங்கள் பாஸ்டா நன்றாக காய்கறிகளுடன் கலந்தவுடன் சுடாகப் பரிமாறவும்.

அன்புடன்
சுபா

Sunday, June 26, 2011

காரம் சாப்பிட்டு நாட்களாகிவிட்டதா..?

இதோ என் வீட்டுத் தோட்டத்திலிருந்து இரண்டு வகை மிளகாய்கள்.

1.ஜம்போ பப்ரிக்கா.. இதில் ஒன்றிற்கு இப்போதே நீளம் ~10செமீ. தாண்டி விட்டது.



2.டொஸ்கானா பப்ரிகா (இத்தாலிய வகை)
காரம் எப்படின்னு தெரியலை. சமைத்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன்.



அன்புடன்
சுபா

Saturday, May 7, 2011

ஆம்சல்

இயற்கை விரும்பிகளின் கண்களுக்கு விருந்தாக இன்று சில படங்கள்..






இரண்டு ஜோடி கருப்புப் பறவைகள் (ஆங்கிலத்தில் blackbird , டோய்ச் மொழியில் Amsel) எப்போதும் வசந்த காலம் தொடங்கும் போது... இவை அழையா விருந்தினராக என் தோட்டத்திற்கு வந்து விடும்.





பனிக்காலத்தில் என்றாவது ஒரு நாள் என் தோட்டத்திற்கு வருகை தரும் இவை வசந்த காலம் முழுவதும் கோடை காலம் முழுவதும் தோட்டத்தில் அங்கும் இங்கு பறந்து கொண்டிருக்கும். இந்த ஆம்செல் எப்போதும் ஜோடியாகத் தான் வரும். தனியாக நான் ஒரு நாளும் பார்த்ததில்லை.





வசந்த கால தொடக்கத்தில் மண்ணைக் கிளறி புதிய செடிகளை நட்டு வைக்கும் போது வெளிப்படும் புழுக்கள் இவற்றின் விருந்து. அப்போது படு சுறுசுறுப்பாக இவை குதித்து குதித்துச் சென்று புழுக்களை அலகால் கொத்திச் விழுங்குவதைப் பார்த்து ரசிக்கலாம்.





இப்போது தினம் தோட்டத்திலேயே இருக்கின்றன. அங்குள்ள சிறிய பழங்களை அவை விரும்பிச் சாப்பிடுகின்றன. சாப்பிட்டு விட்டு தோட்டத்திலுள்ள சிறிய மீன் குளத்திலும் குளிக்கத் தவறுவதில்லை. இந்த 26 டிகிரி வெயில் கூட அவற்றிற்கு களைப்பை ஏற்படுத்துகின்றன போலும்..!



ஆம்செல் என்றோர் உயிரழகு ஊட்டி
டாம்செல் என்னும் துணையொடு கூட்டி
நாம்செல் நாள்வரை நயந்திடும் இன்பம்
ஆம்செலக் கூடும் அழகிது போதும். !!
:-)

-மோகனரங்கன்

அன்புடன்
சுபா