Friday, January 3, 2025

மத்திய ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கிரேக்க கல்வெட்டுகள்


மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தான் நாட்டில்  உள்ள ஒரு மலைப் பாறையில் பண்டைய கிரேக்க கல்வெட்டுகள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பண்டைய பாக்டிரியன் என அழைக்கப்பட்ட இப்பகுதியில்   கிரேக்க எழுத்தில் உள்ள இக்கல்வெட்டு, "ΕΙΔΙΗΛΟ Υ…ϸΑΟΝΑΝϸΑΕ ΟΟΗ-ΜΟ ΤΑΚ-ΤΟΕ" என்றுள்ளது." மன்னர்களின் மன்னன்" என்று இதனை மொழிபெயர்க்கலாம் என பாக்டீரிய மொழி ஆய்வில்  நிபுணரான சிம்ஸ்-வில்லியம்ஸ் (Nicholas Sims-Williams) கூறுகின்றார்.

பாக்ட்ரியா என்பது மத்திய ஆசியாவில் உள்ள இந்து குஷ் மலைத்தொடர் மற்றும் ஆக்ஸஸ் நதிக்கு (Oxus River) இடையில் தற்போது அமு தர்யா நதி (Amu Darya River) என்று அழைக்கப்படும் ஒரு பண்டைய வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட பகுதியாகும். அமு தர்யாவின் துணை நதிகளில் ஒன்றான "பால்க்" என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப்படுகிறது.

வரலாற்று ரீதியாக இது ஒரு ஒருங்கிணைந்த நிலப்பகுதியாக இருந்தாலும், இப்பகுதி இப்போது துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல மத்திய ஆசிய நாடுகளிடையே பிரிக்கப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் மற்றும் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டூஸ் ஆகியவை இன்று அதன் மிக முக்கியமான இரண்டு நகரங்களாகும்.

பண்டைய கிரேக்க தொல்பொருள் சான்றுகளின் அடிப்படையில், ஈரானின் கிழக்கே மற்றும் இந்தியாவின் வடமேற்கில் உள்ள பகுதிகள் கிமு 2500 முதல் இப்பகுதியிலிருந்த பேரரசுகளின் தாயகமாக இருந்ததாகக் அறியப்படுகின்றன.

கிமு 6ஆம் நூ, சைரஸ் தி கிரேட் பாக்ட்ரியாவைக் கைப்பற்றி பாரசீகப் பேரரசில் சேர்த்தார். கிமு 331 இல் கௌகமேலா போரில் Battle of Gaugamela (Arbela) மூன்றாம் டேரியஸ் அலெக்சாண்டரிடம் வீழ்ந்தபோது, ​​​​பாக்டீரியா கடும் குழப்பத்தில் வீழ்ந்தது. வலுவான உள்ளூர் எதிர்ப்பின் காரணமாக, பாக்டிரியன் கிளர்ச்சியை வீழ்த்த கிரேக்க இராணுவத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஆயின.

பாக்டிரியன் மொழி பெரும்பாலும்  αριαo (ஆர்யா) என அறியப்படுகின்ற கிரேக்க எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. கிமு 323 இல் மாமன்னன் அலெக்சாண்டர்  பாக்ட்ரியாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, கிரேக்க மொழி அவரது ஹெலனிஸ்டிக் ராஜியங்களான செலூசிட் மற்றும் கிரேக்க-பாக்ட்ரியன் பேரரசுகளின் நிர்வாக மொழியாக சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்திருந்தது. பின்னர், குஷான் பேரரசு நிர்வாக நோக்கங்களுக்காக கிரேக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது என்றாலும் மீண்டும் பாக்ட்ரியன் மொழிக்கே மாறியது. 

1993இல் கண்டுபிடிக்கப்பட்ட பாக்ட்ரியன் ரபாதக் கல்வெட்டு (Bactrian Rabatak inscription)குஷான் அரசர் கனிஷ்கர் (கி.பி. 127) பாக்ட்ரியன் ("ஆரிய மொழி") மொழியை நிர்வாக மொழியாகத் தக்க வைத்துக் கொண்டு  கிரேக்க  "அயோனியன்" மொழியைக்  கைவிட்டதாக இக்கல்வெட்டு கூறுகிறது.

இதன் விளைவாக, கிரேக்க மொழி அதிகாரப்பூர்வ பயன்பாட்டிலிருந்து குறைந்து, பாக்ட்ரியன் மட்டுமே எஞ்சியிருந்தது. ஆயினும், கிரேக்க எழுத்துரு பாக்ட்ரியன் மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்டது. 

தொடர்ச்சியான மலைசார்ந்த தஜிகிஸ்தானின் இயற்கை நிலப்பரப்பின் நிலஅமைப்பு  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிய நினைவுச்சின்னங்களைக் கண்டறிய பெரும் சவாலாகவே இன்றும் உள்ளது.

அடர்ந்த மலைப் பகுதிகளில் புதைந்து கிடக்கும் நினைவுச்சின்னங்களை அடையாளம் காண்பது ஆய்வாளர்களுக்கு மிகவும் கடினம். இருப்பினும், உள்ளூர்வாசிகள் இத்தகைய பணிகளில் உதவுவதன் வழி  புதிய  தொல்பொருள் சின்னங்களை ஆய்வாளர்கள் பெற முடிகின்றது.

எடுத்துக்காட்டாக, 1932 ஆம் ஆண்டில், ஜூரா அலி என்ற உள்ளூர் விவசாயி Mount Mug பகுதியில் ஆவணங்கள் நிரப்பப்பட்ட கூடை ஒன்றைக் கண்டுபிடித்தார். வரலாற்றில் சோக்ட் பிரதேசத்தில் காணப்படும் சோக்டியன் மொழியின் (Sogdian language) முதல் எழுத்து ஆவணங்கள் என்பதால் இக்கண்டுபிடிப்பு தனித்துவமானதாக ஆய்வுலகில் கருதப்படுகின்றது. அந்த ஆய்வு பண்டைய பென்ஜிகென்ட்டின் (Penjikent) குடியேற்றத்தைப் பற்றி கண்டுபிடிக்க வழிவகுத்தது.

தற்சமயம் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டும் இதே வகையைச் சேர்ந்ததுதான்.  ஹிசோர் சங்கினோவ் மாவட்டத்தில் உள்ள ஷோல் கிராமத்தில் வசித்து வரும் சங்கினோவ் கைதாலி என்பவர் மலைகளில் அவருக்கு அறிமுகமில்லாத எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுகளைக் கண்டார்.

தஜிகிஸ்தானின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் வரலாறு, தொல்லியல் மற்றும் இனவியல் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் போபோமுல்லோ போபோமுல்லோவ் (Bobomullo Bobomulloev)இக்கல்வெட்டை ஆராயும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.   

இந்த ஆய்வில் இப்பாறைக் கல்வெட்டுகள் உண்மையில் பண்டைய எழுத்துக்கள் எனக் கண்டறியப்பட்டன. அவை அல்மோசி ஆற்றின் (Almosi River) வலது புரத்தில் ஓடுகின்ற துணை நதிக்கு அருகில் உள்ள பள்ளத்தாக்கின் வடக்குப் பகுதியில் உள்ளூர் மக்களிடையே கோஜா மஃப்ராஜ் (Khoja Mafraj) என்று அழைக்கப்படும் ஓர் இடத்தில் அமைந்திருந்தன.

இப்பகுதியில்  மேலும் பல கல்வெட்டுக்களை தாம் முன்னர் பார்த்திருந்ததாகவும் அந்த உள்ளூர்வாசி தெரிவித்தார். எனினும் பனிச்சரிவு காரணமாக, கல்வெட்டுகளுடன் கூடிய துண்டுகள் குன்றின் அடிவாரத்தில் விழுந்து சிதைந்திருக்கலாம். தப்பிப்பிழைத்த இப்பகுதி ஒரு தட்டையான பாறை மேற்பரப்பில் மூன்று வரிகளில் செதுக்கப்பட்டுள்ளது. அதில் இருபத்தி மூன்று எழுத்துக்கள் உள்ளன.

கிரேக்க மக்களையும், கிரேக்க பண்பாட்டையும்   மத்திய தரைக்கடலில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஆசியா வரையிலான நாடுகளுக்கு கொண்டு செல்வதில் அலெக்சாண்டர் தி கிரேட் சிறப்பிடம் பெறுகின்றார்.

கிமு 323 முதல் 331 வரையிலான ஹெலனிஸ்டிக் காலம், மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் கிரேக்கர்களின் வருகையால் பண்பாட்டு  மாற்றங்களை அறிமுகப்படுத்தியது.

பாக்ட்ரியாவின் கிழக்குப் பகுதியில் தனித்துவமிக்க கிரேக்க-பாக்டீரிய  பேரரசு  இருந்தது.  கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ், கிரேக்க-பாரசீகப் போர்களின் போது (கிமு 499-449), சிரேனைக்காவில் உள்ள கிரேக்க காலனியான பார்காவை ஒன்பது மாதங்கள் முற்றுகையிட்ட பிறகு, பாரசீக மன்னர் டாரியஸ் (King Darius) அந்நகரத்தின் மக்களை அடிமைப்படுத்தி “அவர்கள் வாழ்வதற்காக இந்த பாக்ட்ரியா  நகரத்தைக் கொடுத்தார்" எனக் குறிப்பிடுவதையும் காண்கிறோம்.

ஆயினும், அலெக்சாண்டரின் வெற்றி அதனை அடுத்த நிகழ்வுகள் நடந்த காலவாக்கில்தான் இப்பகுதியில் கிரேக்கர்களின் வருகையும் இருப்பும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தது. அவரது மரணத்திற்குப் பிறகு, இது  ஹெலனிஸ்டிக் காலத்தில் மத்திய கிழக்கின் பெரும்பகுதியை ஆட்சி செய்த கிரேக்க-மாசிடோனிய  பேரரசின்  தொடர்ச்சியாக கிழக்கு செலூசிட் பேரரசு என    மாற்றம் கண்டது.   

-சுபா

3.1.2025


குறிப்பு உதவி: https://greekreporter.com/.../rock-inscriptions-greek.../