Friday, May 24, 2024

ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித, கால்நடை மற்றும் தேர் அடங்கிய 'வியக்க வைக்கும்' கற்கால புதைகுழி



ஜெர்மனியின்  சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தின் தலைநகரான மாக்டெபர்க் அருகே உள்ள ஒரு தொழில்துறை பூங்காவில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மனித மற்றும் விலங்குகளின் எச்சங்கள் மற்றும் ஒரு பழங்கால சடங்கின் ஒரு பகுதியாக இருந்த தேரின் எச்சங்கள் அடங்கிய கற்கால புதைகுழியைக் கண்டுபிடித்துள்ளனர்.


சாக்சனி-அன்ஹால்ட்டின் மரபுரிமைப் பாதுகாப்பு மற்றும் தொல்லியல் துறையின் மாநில அலுவலகத்தின் அறிக்கையின்படி, பல புதைகுழிகளைக் கொண்ட இந்த ஆய்வுத்தளத்தில் 6,000 ஆண்டுகள் பழமையான "புதைகுழி மேடுகள்" உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், ஒரு புதைகுழி உள்ள மேடு குறிப்பிடத்தக்க வகையில் ஆய்வாளர்களை வியக்க வைத்தது.   இது  இறப்புச் சடங்கு செய்யப்பட்டு இறந்த ஒரு மனிதர் புதைக்கப்பட்ட  ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.   35 முதல் 40 வயதுடைய இறந்த ஒரு மனிதனின் எலும்புக்கூடுகள் இவை.   அவர் இறந்த பின் இரண்டு கால்நடைகள், மற்றும் ஒரு தேர் ஆகியவை சேர்த்து வைக்கப்பட வகையில் இது அகழாய்வில் கிடைத்துள்ளது.  


இது முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானது காலநடை. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த கால்நடையை இந்த இறந்தவருக்காக இம்மக்கள் பலிகொடுத்திருக்கின்றனர்.  தெய்வத்துக்கு வழங்கப்படுவது போன்ற தன்மையை இது வெளிப்படுத்துகின்றது. ஏனெனில் இறந்து போனவர் மிக முக்கியமானவராகவோ, ஒரு இனக்குழு தலைவராகவும் கூட இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்ரனர்.   


இங்கிருக்கும் மேலும் ஒரு புதைகுழி மேடு பொ.ஆ 4100 மற்றும் 3600  கால வாக்கில் ஜெர்மனியில் இருந்த புதிய கற்கால கலாச்சாரமான பால்பெர்க் குழுவினரின் புதைகுழிகளில் ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அந்த மேட்டில் 66 அடி (20 மீட்டர்) நீளமும் 98 அடி (30 மீ) நீளமும் கொண்ட இரண்டு பெரிய, ட்ரெப்சாய்டல் மரத்தினால் உருவாக்கப்பட்ட   wood burial chambers அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் ஏறக்குறைய 660 அடி (200 மீ) இடைவெளியில் உள்ளது.


இந்த இரண்டு புதைகுழிகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த போது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு,  இறந்தோர் சடங்கில்  "கால்நடைகள் பலியிடப்பட்டு, மக்கள்  ஊர்வலம் செல்லும் பாதையாக" இப்பகுதி இருந்திருக்கலாம் என்று இவ்வாய்வுக் குழு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.  


https://www.livescience.com/archaeology/astonishing-neolithic-burial-containing-a-human-cattle-and-chariot-discovered-in-germany


-சுபா

24.5.2024